சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சிக்கல்! ஏற்பட்டுள்ள பரிதாபநிலை
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மேலும் பல உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, சிரிலிய சவியா அறக்கட்டளை மூலம் திரட்டப்பட்ட நிதிகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரக்பி வீரர் வசிம் தஜுதீனின் கொலை வழக்கு
தற்போது மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர், ஊழல், பணச்சலவை மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கப்பால் முன்னாள் ரக்பி வீரர் வசிம் தஜுதீனின் கொலை தொடர்பாகவும் ஒரு தனி விசாரணையும் நடைபெற்று வருகின்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, 73 வயதான முன்னாள் முதல் பெண்மணியை அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் கைது செய்தது.
குடும்பத்தின் இளைய மகனான ரோஹித ராஜபக்சவும் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்டு வருவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள்
ராஜபக்ச குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 2.3 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு விளக்கமறியலில் உள்ளார்.

இதே ஒப்பந்தம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர் மீது குற்றம்சாட்டியவரும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச்செயல் அதிகாரியுமான கபில சந்திரசேன, மே மாதம் உயிரிழந்திருந்தார்.
ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் 2015 முதல் 2019 வரையிலான வழக்குகளை தற்போது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றது.
அதன்படி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிப்போன வழக்குகளை அதிகாரிகள் மீண்டும் உயிர்ப்பித்து வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.