இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவைகளை மீண்டும் தொடங்க யோசனை முன்வைப்பு
பிராந்திய வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தவும் வலுவான மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தவும் இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும் இலங்கை-இந்திய இணைப்பை வலுப்படுத்த நிறுவப்பட்ட ஒரு கூட்டு ஆணையம் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இந்தியா-இலங்கை கூட்டுக் குழு கடந்த வாரம் நடத்திய மெய்நிகர் கூட்டத்தின்போது இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.
மேலும் இந்த கலந்துரையாடல்களின்போது இரு நாடுகளுக்கும் இடையே கப்பல் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இடம்பெற்றதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை மேம்பாடு
கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது பிராந்திய வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் மக்களிடையே வலுவான உறவுகளை மேம்படுத்தும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
2011 இல் கையெழுத்திடப்பட்ட கடல் வழியிலான பயணிகள் போக்குவரத்து தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளின்படி கூட்டுக் குழு சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவைகள் 1980 களில் நிறுத்தப்பட்டன.
இதேவேளை இரு தரப்பினரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் கப்பல் சேவையை ஆரம்பிக்கவிருந்தபோதும் முன்னதாக தேர்ந்தெடுத்த துறைமுகத்தை இந்தியா மாற்றியதால் தாமதமானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |