ஜப்பானுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி:ஷின்சோ அபேவின் சம்பிரதாயபூர்வ இறுதிக்கிரியைகளிலும் கலந்துக்கொள்கிறார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் புஃமியோ கிஷீடாவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதன் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பானிடம் இருந்து உதவிகளை பெறுவது, ஜப்பானிய முதலீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
ஷின்சோ அபே ஜனாதிபதி ரணிலின் நீண்டகால அரசியல் நண்பர்
ஜப்பான் செல்லும் ஜனாதிபதி அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் சம்பிரதாயபூர்வமான இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நீண்டகால அரசியல் நண்பர்கள்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில் ஜப்பான் பிரதமர் என்ற வகையில் ஷின்சோ அபே இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளார்.
ஜூலை மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர்
ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் அரசியல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
ஷின்சோ அபேவின் தகனம் செய்யப்பட்ட உடலின் அஸ்தி தொடர்பான இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ளது.