திருகோணமலை- அளுத்தோயாவில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு
திருகோணமலை- அளுத்தோயா கிராமப் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் எதிர்கொள்ளும் இந்த அத்தியாவசியக் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், ஹிங்குராக்கொட பிரதேச சபை மற்றும் ஹிங்குராக்கொட பிரதேச செயலகம் இணைந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு 16,000 லீற்றர் குடிநீரை இலவசமாக விநியோகித்து வருகின்றன.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், "கிராமத்திலுள்ள கிணறுகள் அனைத்தும் முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் ஏனைய அன்றாடத் தேவைகளுக்கும் தண்ணீரின்றி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோரிக்கை
தற்போது பிரதேச செயலகத்தின் மூலம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போசர் (Bowser) வண்டிகள் வாயிலாக விநியோகிக்கப்படும் குடிநீரையே மக்கள் நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், வறட்சியின் தாக்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள சிறுதானியப் பயிர்கள், பழமரங்கள் மற்றும் விவசாயச் செய்கைகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.

இதனால் கிராமவாசிகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அழிவடைந்த மரங்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளை மீண்டும் சீரமைக்க 5 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும்."
எனவே, விவசாயத்துறை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு விஜயம் செய்து நிலமையை நேரில் ஆய்வு செய்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு/நிவாரணங்களையும், குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வையும் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் உருக்கமான கோரிக்கை விடுக்கின்றனர்.