மோசமான நெருக்கடியைச் சந்தித்து வரும்அரச பல்கலைக்கழகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரச பல்கலைக்கழகங்கள் கடுமையான மனிதவள பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளால் மிக மோசமான நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மு.ரவி தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அதன் மூலமாக எங்களுக்கு எந்தவிதமான ஒரு சாதகமான பதிலும் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தராததன் காரணமாக, நாங்கள் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் தொடர்ந்து பல தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம்.
நெருக்கடிகள்
ஆகவே இந்த வாரம் முழுவதும் நாங்கள் மக்களுக்குத் தற்போது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற பிரச்சனைகள், அதேபோல இருக்கின்ற நெருக்கடிகள், விரிவுரையாளர் பற்றாக்குறை, உள்ளக வசதிகளினுடைய பற்றாக்குறை போன்ற சகல விடயங்களையும் நாங்கள் பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

அதன் மூலமாக இன்றைய காலகட்டத்தில் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்களும் ஒரு தெளிவான ஒரு விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆகவே கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நலன் கருதி விடுதிகள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல தொலைவிலிருந்து வந்து கடமையாற்றும் விரிவுரையாளர்களுக்கும் குடும்ப விடுதிகள்ஃகுவாட்டர்ஸ் வசதிகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
தொழிற்சங்க நடவடிக்கை
இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்துத் தான் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம். வரிச்சுமை காரணமாக அநேகமானோரை நாங்கள் இழக்க வேண்டியுள்ளது.

இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவெடுக்கப்பட்டதற்குக் காரணம் விடுதி வசதிகள் இங்கு போதுமானதாக இல்லை. வெளியிலும் மாணவர்கள் தங்கக்கூடிய வசதிகள் பல்கலைக்கழக சூழலில் இல்லை. நிறையப் பணம் கொடுக்க வேண்டியதாக உள்ளது.
நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்தைக் கேட்டிருந்தோம். வெள்ளிக்கிழமை நாங்கள் மீண்டும் சந்தித்து, பெரிய செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தவிருக்கின்றோம். எதிர்காலத்தில் எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்துத் தீர்மானித்துச் செயற்படுத்துவோம் எனக் குறிப்பிட்டார்.