நாடு முழுவதும் பொலிஸ் அதிரடி வேட்டையில் பலர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 29 ஆயிரத்து 727 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 597 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 25 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 218 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 136 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்தல்
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 136 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 36 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்துக் குற்றங்களுக்காக 4 ஆயிரத்து 795 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 22 கிலோகிராம் 486 கிராம் ஹெரோயின், 172 கிலோகிராம் 572 கிராம் ஐஸ், 02 கிலோகிராம் 616 கிராம் கஞ்சா, 12,734 கஞ்சா செடிகள், 01 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 08 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1039 போதை மாத்திரைகள், 11 கிராம் 200 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 1 கிலோகிராம் 301 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்தப் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 649 சந்தேகநபர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 653 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 9 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.