ஏழு வயது சிறுமியை தவறான செயலுக்கு உட்படுத்திய முதியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை
ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குறித்த குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிறுமிக்கு 30 இலட்சம்
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 இலட்சம் ரூபாவும், அவரது தாய்க்கு 10 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த இழப்பீடு செலுத்தப்படாவிட்டால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன், அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,
“குற்றவாளி ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது ஐந்து பிள்ளைகளும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவ்வாறு பெண் குழந்தைகளை கொண்ட ஒரு தந்தை இத்தகைய தவறான செயலை செய்தமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அவருக்கு சட்டத்தால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையை விதிக்க வேண்டும்.
சிறுமியின் தாய்
எனினும் குற்றவாளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,
“குற்றவாளி 62 வயதுடையவர். அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக காசநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது இளைய மகள் 14 வயதுடையவர். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு லேசான தண்டனை விதிக்க வேண்டும். என கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,
“தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதி இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதவாறு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.’’ என கோரியுள்ளார்.
நீதிபதி உத்தரவு
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி,
குற்றவாளியின் குற்றத்தின் தன்மையை பரிசீலிக்கையில், இது தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது.
ஐந்து பெண் குழந்தைகளின் தந்தையாக இருந்தும், பெண் குழந்தைகளின் மதிப்பை உணர்ந்திருக்க வேண்டிய அவர், ஏழு வயது சிறுமியை இவ்வாறு செய்தது கடுமையான குற்றமாகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சமூகத்தில் வலுவான குரல் எழுப்பப்படும் இந்த காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்களை சமூகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
எனவே குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது” என நீதிபதி அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
