இந்திய தம்பதியினருக்கு அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்
ட்ரோன் கமரா ஒன்றினை பறக்கவிட்டு புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் இந்திய தம்பதியினர் இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபா அடிப்படையில் 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அனுமதியின்றி, ட்ரோன் கமரா ஒன்றினை ஆகாயத்தில் பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவு செய்ததாக குறிப்பிட்டு வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல இந்த அபாரத தொகையை விதித்து குறித்த தம்பதியினரை விடுதலை செய்தார்.
இந்தியாவின் ஹைதராபாத், மதுர நகர் பகுதியைச் சேர்ந்த அன்வேஷ் ஷர்மன் நடே பிள்ளை, டிக்ஷியா த்ரகஸ்னா எனும் தம்பதியினரே இவ்வாறு அபாராதம் செலுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டவர்களாவர்.
தேனிலவுக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இந்த இளம் தம்பதி, வெலிகம கடற்கரையில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி வீடியோ, மற்றும் புகைப்படங்களை எடுத்தமைக்காக, வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று கொழும்பு பிரதான நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வண்ணம் எந்த விடயங்களும் அடங்கியிருக்காமையை கருத்திற்கொண்ட பிரதான நீதிவான், அபராதம் செலுத்திய பின்னர் குறித்த தம்பதியினரை விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களாக கருதி கைது செய்யப்பட்ட குறித்த தம்பதியினர், அனுமதி பத்திரம் இன்றி ட்ரோன் கமராவை பயன்படுத்தியமை தமது குற்றம் என ஒப்புக்கொண்டதை அடுத்து இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவில் விமான சேவை அதிகார சபை சட்டத்தின் 303 (3) அத்தியாயத்தின் கீழ் குறித்த இருவருக்கும் எதிராக வெலிகமை பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.