சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் அனுமதியுடன் போதையில் வாகனம் செலுத்திய சாரதி!
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதியை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், தனக்கு கீழுள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தும் வகையிலான காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமதுவ நுழைவாயிலுக்கு அருகில் மதுபோதையில் ஒருவர் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முற்பட்டபோது பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது, மதுபோதையில் இருந்த சாரதி தான் குடித்துவிட்டு வாகனம் செலுத்துவதாகவும்,சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுடன் மது அருந்திவிட்டு வீடு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் குறித்த நபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தொலைபேசி ஊடாக, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு கடுமையான தொனியில் குறித்த நபரை பயணிப்பதற்கு அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக ,சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்தினால் கடமையில் இருந்த அதிகாரிகள் அதிவேக நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரை விடுவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைபேசி ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
