சஜித்துக்கு தொலைபேசி சின்னம் இல்லை! டயனாவின் கணவரால் தென்னிலங்கை அரசியலில் குழப்பம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை (Sajith Premadasa), எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க மாட்டோம் என எமது மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரான டயனா கமகேவின் கணவருமான சேனக டி சில்வா (Senaka De Silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (10.05.2024) நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”ஐக்கிய மக்கள் சக்தியை நான் தான் ஸ்தாபித்தேன். 2010ஆம் ஆண்டு ஸ்ரீபதி சூரியாராச்சியும் மங்கல சமரவீரவும் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்தார்கள்.
எழுத்து பூர்வமான சான்றுகள்
அதன் பின்னர் எமது மக்கள் முன்னணி கட்சியின் ஸ்தாபகராக இருந்த நான் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர், கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமித்தேன்.
அப்போது கட்சியின் செயலாளராக இருந்த டயனா கமகே, அந்தப் பதவியிலிருந்து விலகியதையடுத்து, ரஞ்சித் மத்தும பண்டார அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்லவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவை அனைத்துக்குமான எழுத்து பூர்வமான சான்றுகள் உள்ளன. இந்நிலையில், தேவையேற்பட்டால் சஜித் பிரேமதாஸவின் கட்சியின் தலைமை பதவியை நாம் கேள்விக்கும் உட்படுத்த முடியும்.
ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சினைகள்
அரசியல் கட்சிகள் பல மில்லியன் ரூபாக்களுக்கு விற்பனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்கள் கட்சியை ஒரு சதம் கூட பெறாமல் இலவசமாகவே கையளித்தோம்.
இப்போதும் நாங்கள் நினைத்தால் கட்சியை மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். நீதிமன்றம் ஊடாக சஜித்தின் தலைமைத்துவத்தை இரத்து செய்ய முடியும்.
இதுதொடர்பாக நாம் வழக்கும் தாக்கல் செய்யவுள்ளோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.
அந்தவகையில், ஒருபோதும் தொலைபேசி சின்னத்தில் அவரை களமிறக்க இடமளிக்க மாட்டோம்” என கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - அநதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |