மனித உரிமைகள் மேம்பாட்டு திட்டம் தொடர்பான செயலமர்வு (Photos)
திருகோணமலையில் 'நீதிக்காக எங்கள் குரல்' எனும் தொனிப்பொருளில் பெண்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மனித உரிமைகள் மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஜூப்லி மண்டபத்தில் இன்று கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மதிவண்ணனின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நடைபெற்ற இந்த செயலமர்வில் திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம், அமரா பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் இளையோர் தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் மையம் திருகோணமலை மாவட்டத்தில் இல்லை, வைத்தியசாலைகளில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை மற்றும் அண்மையில் அரசினால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் விசேட தேவையுடையவர்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டமை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு தனியான ஆணைக்குழு அமைக்கப்பட்டு அவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பன நாட்டில் நிலவுகின்ற பாரபட்சம் தலைதூக்கியுள்ளமை என்பன தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளும் அடங்கிய ஆய்வு அறிக்கை குறித்த அமைப்புகளினால் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மதிவண்ணனினால் கையளிக்கப்பட்டது.
இதில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுகந்தினி, விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







