நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களைப் பெறாது: செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை பெறாது. தமிழர்களாகிய நாங்கள் அதிக ஆசனங்களை, இனத்தின் சார்பாக வெல்கின்ற போது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்று (10) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"வன்னியில் எமது அணி சார்பில் போட்டியிடும் அத்தனை பேரும் விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விடுதலையை அகிம்சை வழியில் பெறுவதற்காக நாங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
தேசியபட்டியலில் ஆசனம்
அற்ப சலுகைகளைகளுக்காக நாங்கள் துணை போகமாட்டோம். தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதற்கு நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் கவலையடைய வேண்டாம்.
இனத்தின் விடுதலையினை நோக்கிச் செல்லும் சின்னமாக சங்குச்சின்னம் இருக்கின்றது. அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை பெறாது.
எனவே, தமிழர்களாகிய நாங்கள் அதிக ஆசனங்களை இனத்தின் சார்பாக வெல்கின்ற போது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது.
எமது கூட்டமைப்பு இந்த தேர்தலில் 11 ஆசனங்களை பெறும். 10ஆசனங்கள் மக்களால் தெரிவு செய்யப்படும் என்பதுடன் தேசியபட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும். பதினொரு ஆசனங்களை கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |