வடக்கு மக்களின் நம்பிக்கையை பெறும் வாய்ப்பு! செல்வம் எம்.பி அரசாங்கத்திற்கு கூறும் யோசனை
வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைத்து, பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிக்க அரசு நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (28.11.2026) நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கேக் வெட்டிய 3 இளைஞர்கள் கைது
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மன்னார் பிரதேசத்தில் பிறந்த நாளொன்றை முன்னிட்டுக் கேக் வெட்டிய 3 இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 3 இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும். நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகளை மக்கள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கும் நிலையில், அவர்களை இவ்வாறு கைது செய்தது ஏற்புடையதல்ல.
எனவே, இவர்களை விடுதலை செய்ய வேண்டும். மன்னார் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் மிக மோசமான பழைய கட்டடங்களைக் கொண்டதாகவும் அடிப்படை வசதிகள் இல்லாததாகவும் இருக்கின்றன. இது தொடர்பில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை, மன்னார் பாலத்துக்குக் கீழுள்ள சோதனைச் சாவடியைத் தள்ளாடிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
சோதனைச் சாவடி அவசியமானதுதான். ஆனால், அவ்விடம் பொதுமக்கள் பாவனைக்குரிய இடமாக இருக்கின்றது. மக்கள் அவ்விடத்துக்கு வந்து படகுகளில் பயணித்து ஓய்வெடுக்கும் இடமாக இருப்பதால், பொதுமக்கள் அதனைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் சோதனைச் சாவடியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இராணுவத்தினரின் எண்ணிக்கை
இராணுவக் குறைப்பு மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர், "இராணுவம் தொடர்பில் ஜனாதிபதி சில விடயங்களைக் கூறியிருந்தார். இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான படையினர் நிலைகொண்டுள்ள நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஏன் இவ்வாறு வடக்கு, கிழக்கில் கூடுதலான படையினர் இருக்கின்றனர்? அங்கு ஏன் அதிகளவான காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன? இக்காணிகளை ஒப்படைக்க வேண்டும் என்றே மக்கள் வீதிகளில் போராடுகின்றனர். 10 பேருக்கு இரண்டு படையினர் என்ற விகிதத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. ஏன் இந்தளவுக்குப் படையினர் அவசியமாகவுள்ளனர்?
அங்குள்ள படையினரைக் குறைத்து, பொதுமக்களின் காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்கும்போது அரசாங்கம் மக்களிடையே நல்ல இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறும். இதேவேளை, மக்களுடைய காணிகளை விடுவிக்கும்போது மீண்டும் மீண்டும் அக்காணிகளைக் கையகப்படுத்த முயற்சித்தால் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தும் சூழலே உருவாகும்.
கடந்த கால அரசுகள் செய்தவற்றையே நீங்களும் செய்யக்கூடாது. காணி விடுவிப்பு விடயத்தில் கடந்த அரசுகளிடம் பேசிச் சலிப்படைந்துள்ளோம். தற்போதைய அரசுடனும் பேசியுள்ளோம். அரசு செய்யும் நல்ல விடயங்களை நாங்கள் பாராட்டுவதுடன், அதற்கு ஒத்துழைப்பையும் வழங்குவோம்" என்றார்.