தேசிய மக்கள் சக்தி வென்றால் மன்னாரை காப்பாற்ற முடியாது: அடைக்கலநாதன் எம்.பி
மன்னாரில் உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி (NPP) முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (16) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்றனர்.
கனிய மணல் அகழ்வு
ஆனால் பாதிக்கப்பட்ட வன்னி பிரதேசங்களுக்கும் உங்களின் விஜயம் இடம் பெற வேண்டும் என அண்மையில் நாடாளுமன்றத்தில் கோரிக்கையை முன் வைத்து உரை நிகழ்த்தினேன். ஆனால் ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரமே வன்னி பிரதேசங்களுக்கு வருகின்றனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்திற்கு வருகின்றனர்.தேர்தலில் தமது கட்சி வெற்றியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்துடன் வருகிறார்கள்.
குறிப்பாக மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி பிரதான விடையமாக பார்க்கப்படுகின்றது.
மன்னார் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த செயல்பாடுகளை நிறுத்த கோரிக்கை விடப்பட்டது.
ஆனால் தற்போது மன்னாரிற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் வருகை என்பது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்கும்,குறித்த இரு திட்டங்களையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக அமையும்.
ஜனாதிபதியின் வருகை
உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான அனுமதியை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை.
எனவே உள்ளூராட்சி மன்றங்களை ஜே.வி.பி.அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும்.
கடந்த 6 மாதங்களுக்குள் மன்னாரிற்கு ஜனாதிபதியின் வருகை இடம் பெறவில்லை.எனினும் ஒரு சிறிய தேர்தலுக்காக அவர் மன்னாருக்கு வருகிறார். கடற்றொழில் மற்றும் சுகாதார அமைச்சர்கள் மன்னாருக்கு வருவதாக கூறினார்கள்.
இது வரை அவர்களின் வருகை இடம் பெறவில்லை. ஆனால் தற்போது அவர்கள் எல்லோரும் மன்னாரிற்கு வருகை தருவது எமது மண்ணையும்,காற்றையும் வருமானமாக்குவதாகவே நோக்கமாக உள்ளது.எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |