பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவு முறை வெளிப்படையானதா! வினைத்திறன் மிக்கதா
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆளுகைக்குட்பட்ட அரச பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்குத் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுநிருபம் தகுதியும், திறமையும் மிக்கவர்களைத் துணைவேந்தராகத் தெரிவு செய்வதற்கு வழி செய்கிறதா, இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் அண்மைக்காலமாக எழுந்துள்ளன.
துணைவேந்தர் தெரிவில் ஏற்பட்ட சர்ச்சையினால் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளைப் புறக்கணித்திருப்பதன் காரணமாக பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி நடவடிக்கைகள் மாதக்கணக்கில் தடைப்பட்டிருக்கின்றன.
சுற்றறிக்கை நடைமுறைகளுக்கு அமைய நடாத்தப்பட்ட துணைவேந்தர் தெரிவு முடிவுகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிராகரித்திருப்பது நியாயமற்றதொன்று என்பதை வலியுறுத்தி அப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பை அறிவித்து, கடந்த இரண்டு மாதங்களாகப் பணிப்புறக்கணிப்புத் தொடர்கிறது.
புதிய துணைவேந்தர்
அதேபோல, வேறொரு பல்கலைக்கழகத்தில் சுற்றறிக்கை நடைமுறைகளின் படி நடாத்தப்பட்ட துணைவேந்தர் தெரிவில் வெளிப்படையாக முறைகேடு இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அந்தத் தெரிவு ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டதோடு, அத் தெரிவில் ஈடுபட்ட பல்கலைக்கழகப் பேரவை கலைக்கப்பட்டு – புதிய பேரவை நியமிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்பட்ட தெரிவின் பின்னர் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேற்சொன்ன சம்பவங்களைப் போலவே வேறு பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு அடங்கியிருக்கின்றன. இதனால் தானோ என்னவோ தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கை தகுதியும், திறமையும் மிக்கவர்களைத் துணைவேந்தராகத் தெரிவுசெய்வதற்கு வழி செய்கிறதா? இல்லையா? என்ற வினா எழச் செய்கிறது.அந்த ஐயம் மிக அண்மைக்காலமாக அதிகரிக்கவும் செய்கிறது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் 1978 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 34ஆம் பிரிவு மற்றும் அதன் பின் வந்த திருத்தங்களும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 10.04.2023 திகதிய 03/2023 ஆம் இலக்க சுற்றறிக்கையுமே தற்போது நடைமுறையில் உள்ளன.
பல்கலைக்கழகங்கள் சட்ட ஏற்பாடுகளின் படி, நாட்டின் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் படி அரச பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தரை நியமிப்பதற்கான ஏக உரிமை ஜனாதிபதிக்கே உண்டு.
தற்போதைய சுற்றறிக்கையின் படியோ அல்லது இதற்கு முன்னர் பின்பற்றப்பட்ட சுற்றறிக்கைகளின் அடிப்படையிலோ அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் பேரவையினால் பரிந்துரைக்கப்படும் மூன்று பெயர்களில் இருந்து ஒருவரைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்விக்குப் பொறுப்பான அமைச்சு ஆகியவற்றின் சிபார்சுடன் ஜனாதிபதி நியமிப்பார்.
பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் படி நியமன அதிகாரம் ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற போதிலும், ஆட்சியில் இருக்கின்ற : இருந்த அரசியல்வாதிகளின் - அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அந்நியமனத்தில் மீந்து காணப்படும். அதனால் தான் நீதியான முறையில் வெளிப்படைத் தன்மை மிக்கதாகத் தகுதியும், திறமையும் மிக்கவர்கள் துணைவேந்தர்களாகத் தெரிவு செய்யப்படுவது சவால் மிகுந்ததாக உள்ளது.
பல்கலைக்கழகங்கள்
பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்வதற்கு மட்டுமே ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்ற போதிலும், மூன்று பேரைப் பரிந்துரைப்பதற்காகப் பேரவை பின்பற்ற வேண்டிய நடைமுறைகளின் காரணமாக மிகத் திறமையான பலரைப் பல்கலைக்கழகங்கள் இழந்திருக்கின்றன.
தற்போதைய சுற்றறிக்கைக்கு முன்னைய 02/2020 சுற்றறிக்கைக்கு முன்னர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பிப்பவர்களில் இருந்து மூன்று பேரை வாக்களிப்பு முறை மூலம் தெரிவு செய்து – பேரவை உறுப்பினர்களின் அதிகூடிய விருப்பு வாக்கு ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழமை.

அதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட 02/2020 சுற்றறிக்கைகயின் படி, பல்வேறு துறைசார் நிபுணத்துவமுடைய ஐந்து நிபுணர்களைக் கொண்ட மதிப்பீட்டுக்குழு ஒன்றினால் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அக் குழுவினால் ஐந்து பேர் புள்ளி ஒழுங்கில் பேரவையின் தெரிவுக்காகப் பரிந்துரைக்கப்படும்.
அந்த ஐந்து பேரில் இருந்து மூவரைப் கட்டமைக்கப்பட்ட புள்ளித் திட்டத்தின் அடிப்படையில் பேரவை தெரிவு செய்து,அப்புள்ளி ஒழுங்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது நடைமுறையிலுள்ள 03/2023 சுற்றறிக்கையின் படி, பதவியில் இருக்கின்ற துணைவேந்தரின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு ஆறு மாத காலத்துக்கு முன்னராக அப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் கோரப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகக் கிடைக்கும் அத்தனை விண்ணப்பதாரிகளும் தமது விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த தமது எதிர்காலத் திட்டங்கள், கடந்தகாலச் சாதனைகளின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
தெரிவுக் கூட்டத் தினத்தில் விண்ணப்பதாரி ஒருவர் கல்வியில் மீயுயர் நிலையும், நாணயமும் வலிமையான ஆராய்ச்சிப் பின்புலத்தோடு கூடிய தலைசிறந்த சாதனைகளுக்கு உரித்துடையவராகவும், பலதிறப்பட்ட ஆர்வக் குழுக்களுடன் அறிவார்ந்த நிலையில் தொடர்புறுவதற்காக நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவ பண்புகளையும் ஆட்தொடர்பாடல் திறன்களையும் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

கொள்கை விடயங்களில் ஒரு தெளிவான புரிதல் உடையவராகவும், மாணவர் மற்றும் ஊழியர் ஆகியோரின் பல்திறப்பட்ட ஈடுபாட்டைத் தூண்டக்கூடிய வல்லமையுடன் கூடிய உன்னதமான தொடர்பாடற்திறன்களையும் தீர்மானங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதில் பற்றுறுதியும் கொண்டவராகவும் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கும் அளிக்கையின் அடிப்படையிலும், சுற்றறிக்கையின் படியான கட்டமைக்கப்பட்ட புள்ளித் திட்டத்தின் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் புள்ளிகளை வழங்கி, அப்புள்ளிகளின் அடிப்படையில் முன்னணி வகிக்கும் மூன்று பேரது பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
முன்னர் பின்பற்றப்பட்ட அல்லது தற்போது பின்பற்றப்பட்ட எந்த நடைமுறைகளிலாயினும், மூன்று பேரைப் பரிந்துரைக்காகத் தெரிவு செய்வதென்பது முற்றிலும் திறமை அடிப்படையிலன்றி – தனிப்பட்ட முகப்பெறுமதி அல்லது செல்வாக்கின் அடிப்படையிலேய அமைவது என்பது தான் சுற்றறிக்கை நடைமுறையிலுள்ள பிரதிகூலமாகச் சொல்லப்படுகிறது.
என்னதான் சட்டத்தின் படி ஜனாதிபதியிடம் நிறைவேற்றதிகாரம் இருந்தாலும், பேரவையினால் முன்மொழியப்படும் மூன்று பெயர்கள் மட்டுமே ஜனாதிபதிக்குரிய தெரிவாகக் காணப்படுகின்றது. அதனால், ஜனாதிபதிக்குக் கூட தெரிவு மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்திருக்கிறது.
இதைவிட, சுற்றறிக்கைகள் காலத்துக்குக் காலம் வேறுபட்ட போதிலும், பேரவையில் விண்ணப்பதாரிகளின் செல்வாக்கு அவர்களுடைய தகுதி – திறமையை விட முன்னிலை வகிக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரு உதாரணங்களின் போதும், அப் பல்கலைக்கழகங்களில் பேரவை உறுப்பினர்களின் புள்ளியிடல் விண்ணப்பதாரிகளின் தகுதிக்கும், திறமைக்குமன்றி பேரவை உறுப்பினர்களிடையே அவர்களுக்கிருந்த அறிமுகத்தின் அடிப்படையிலேயே இடம்பெற்றிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தெரிவு
பல்கலைக்கழகங்களின் பேரவை என்பது 1978 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டம் அதன் பின் வந்த திருத்தங்களின் படி அந்தந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர், பிரதித் துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் மூதவையினால் முன்மொழியப்பட்ட இரண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன், இவர்களை விட ஒருவரை அதிகமாகக் கொண்ட வெளிவாரி உறுப்பினர்களைக் கொண்ட கட்டமைப்பாகும்.

இக்கட்டமைப்பில் உள்வாரியாக விண்ணப்பித்திருக்கும் ஒருவர் பேரவை உறுப்பினர்களுடன் கூடிய அறிமுகத்தைக் கொண்டிருப்பராயின் அவருக்குத் துணைவேந்தர் தெரிவின் போது செல்வாக்கு அதிகமாகக் காணப்படுவது இயற்கையே. அது தவிர இயல்பாகக் காணப்படும் பிரசார உத்திகளும், மற்றவர்களைப் புறம்சொல்லும் பண்புகளினாலும் புள்ளியிடல் தீர்மானிக்கப்படுகின்றது.
எல்லாவற்றும் மேலாக, பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் ஆட்சியில் இருக்கின்ற : இருந்த அரசியல்வாதிகளின் - அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் ஜனாதிபதியின் நியமனத்தைத் தீர்மானிக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் நியமனத்துக்கான பெயர்களைப் பரிந்துரை செய்வதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் எதிர்வரும் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
துணைவேந்தர் தெரிவுக்காக கிடைத்திருக்கும் 7 விண்ணப்பதாரிகளும், பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் அளிக்கை செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். என்றுமில்லாதவாறு ஊழலற்ற அரசாங்கம் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தை – குறிப்பாக வடக்கைப் பொறுத்தவரை ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்று சொல்லப்படுமளவுக்கு அரச உயர்மட்ட நியமனங்களின் போது அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்படுகின்ற நிலையில், திறமை அடிப்படையில் புள்ளியிடல் அமையுமா? எந்த வித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையான முறையில் ஜனாதிபதியின் தெரிவு அமையுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.