சித்திரைப் புத்தாண்டுக்காக நாடு முழுவதும் பாதுகாப்பு! களத்தில் 10 ஆயிரம் பொலிஸார்
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றைப் பொலிஸ் தலைமையகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையானது நாட்டிலுள்ள அனைத்து 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவான முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் பொது இடங்களைக் கண்காணிப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பண்டிகை தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
திருட்டுச் சம்பவங்கள் மற்றும் அத்துமீறல்களைத் தவிர்க்கும் வகையில் சீருடை தரித்த மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாகனச் சோதனைகள் மற்றும் வீதிப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் அதிவேகமாகச் செல்பவர்களைக் கண்டறிய ஆங்காங்கே விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வண்ணம் இந்த விசேட பாதுகாப்புத் திட்டம் ஏப்ரல் மாதம் முழுவதும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.