போராட்டக்காரர்களின் பின்னால் இரகசிய சக்திகள்! வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அசாத் சாலி தகவல்
போராட்டக்காரர்களின் பின்னால் இரகசிய சக்திகள் இருந்ததாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளிச்சத்திற்கு வரும் இரகசியங்கள்..
மூன்று மாதங்களாக நாட்டின் நிர்வாகத்தை இயக்கும் முக்கிய அலுவலகங்களை முடக்கி, ஆர்ப்பாட்டம் செய்வதை அமைதியான ஆர்ப்பாட்டம் என்று சொல்ல முடியாது. இவர்களிடம் இருந்தவை அனைத்தும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சிகள்.
ஏதோ ஒரு சக்தி, பின்னாலிருந்து இந்த "அரகலகாரர்களை"(போராட்டக்காரர்களை) இயக்கிய இரகசியங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வருகின.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்த இடங்களைப் பாருங்கள். ஷங்ரிலா ஹோட்டல், கோல்பேஸ் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், துறைமுக நகர், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகங்களையே இவர்கள் சுற்றிவளைத்தனர். சுற்றுலாத் துறையினர் வந்துபோகின்ற பிரதேசங்களே இவை.
இவ்விடங்களை மறித்து மாதக்கணக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அரச இயந்திரம் இயங்குவதில்லையா? சுற்றுலாத்துறையினர் வருவதில்லையா? இதற்காகத்தான், இவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஜனநாயக செயற்பாடுகள், சிவில் சமூக செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் இல்லாதிருக்க வேண்டும். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் முழுக்க, முழுக்க சிவில் செயற்பாடுகளை குழப்பிக்கொண்டே இருந்தனர்.
ஆர்ப்பாட்டம் செய்வது, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதெல்லாம் ஜனநாயக செயல்பாடுகளில் உள்ளவைதான். இதற்காகத்தான், விகாரமாதேவி பூங்கா மற்றும் ஹைட்பார்க் விளையாட்டுத்திடல் போன்ற ஒதுக்குப்புறங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.