மீண்டும் சிம்மாசனம் ஏறும் ராஜபக்சர்கள்!
"நீங்கள் தேடிய தலைவன் நானே" என்று நந்தசேன கோட்டாபய ராஜபக்ச 4 பெப்ரவரி 2001 ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது சிங்கள மக்கள் மத்தியில் பேசுகையில் அறிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில் "சிங்கள பௌத்தத்தை அதன் வேரிலிருந்து பாதுகாக்கும் தலைவன் என்று சொல்வதற்கு நான் ஒரு போதும் தயங்க போவதில்லை என்னை பௌத்த மகா சங்கம் வழிநடத்தும்" என்றும் முழங்கினார்.
ஆனால் 2022 இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க பாணுக்கும், பருப்புக்கும், எரிவாயுவுக்கும், பெட்ரோலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்ட போது அதே பௌத்த சிங்கள மக்கள் “கோட்டா கோ கோம்” என முழக்கமிட்டு வீதியில் இறங்கி போராடினர்.
காலிமுகத்திடல் போராட்டம்
அவர் தங்கக்கூடிய இடங்களையும் மக்கள் முற்றுகையிட்டனர். மக்களின் எழுச்சியை கண்டு முகம்கொடுக்க முடியாதவர் தங்குவதற்கு இடமின்றி அலைந்து திரிந்து 13 ஜூலை 2022 நாட்டை விட்டு ஓடினார்.
மறுநாள் அரசு பதவியை இராஜினாமா செய்து விட்டதாக அறிவித்தார். பதவியில் இருந்த ராஜபக்ச குடும்பத்தை பதவியில் இருந்து வெளியேற்றியமை அல்லது பதவி விலக செய்தமை போராட்டக்காரர்களுக்கு கிடைத்த வெற்றிதான்.
ஆனால் இந்த போராட்ட வெற்றி உண்மையானதா? நிலையானதா? போராட்டக்காரர்களுக்கோ அல்லது இலங்கை மக்களுக்கோ, அல்லது இலங்கை அரசியல் அமைப்புமுறை மாற்றங்களுக்கோ முற்போக்கான தலைமைத்துவ உருவாக்கத்துக்கோ வழிவகுத்ததா ? பயனளித்ததா? என்பதை பற்றி பார்க்கப்பட வேண்டும்.
அரசியல் தலைமைத்துவ மாற்றம்
"இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது போல" என்ற ஒரு சிங்கள பழமொழி உண்டு அப்படித்தான் அரசியல் தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்தது. ஒரு செயல் தரவல்ல விளைவுகளில் இருந்துதான் அச்செயல் பற்றி பெறுமானம் அளவீடு செய்யப்பட வேண்டும்.
இந்த போராட்டத்தை நடத்தியவர்களுக்கும் தமிழர்களுக்கும் இப்போராட்டம் தொடர்பாக எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இந்த போராட்டத்தில் தமிழர்கள் சார்ந்த எந்த விடயங்களும் முன்வைக்கப்படவும் இல்லை.
ராஜபக்சர்கள் பதவி துறந்தது நாட்டை விட்டு ஓடியமை என்பதனால் தமிழ் மக்களை பொறுத்த அளவில் உளவியல் திருப்தி அதாவது உள்ளுர் மகிழ்ச்சியும் உண்டுதான். ஆனால் இந்த போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு எந்த வெற்றியும் கிடையாது. எந்த பங்கும் பாத்திரமும் கிடையாது.
அதேவேளை இலங்கையில் பிரபலமான மனித உரிமைகள் சம்பந்தமாகவும் பொதுநலன் சார்ந்தும் நடுநிலைமையான பத்திரிகை என கருதக்கூடிய "கிரு" சிங்கள பத்திரிகையின் ஆசிரியர் பாசன அபயசேகர ஒரு காணொளி பேட்டியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“கொழும்பில் நடந்த போராட்டத்தினால் கோட்டாபய பதவி விலகி போனார் என்பது உண்மையானாலும் அதில் இன்றைய இலங்கை பொருளாதார பிரச்சினைக்கு மூல காரணமான தமிழ் மக்களின் பிரச்சினை அடங்கவில்லை” என்பதை பதிவு செய்கிறார்.
அவர் மேலும் குறிப்பிடுகின்ற போது “கொழும்பு கிளர்ச்சிக்காரர்கள் கோட்டாபய மீது
1) ஊழல்
2) கொள்ளை
3) குடும்ப ஆட்சி
ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளையே முன்வைத்து போராட்டத்தை நடத்தினர்.
ஆனால் அவருக்கு எதிரான பிரதானமான உண்மையான
குற்றச்சாட்டுகளான,
1) கொலையாளி என்பதை முன்னிறுத்தவில்லை.
2) இறுதி யுத்தத்தில் மனித குலத்துக்கு எதிரான குற்றமும் போர் குற்றமும் இவரின் ஆணையினாலேயே நிகழ்த்தப்பட்டது என்பது முன்வைக்கப்படவில்லை.
3) இவர் இனவாதத்துடன் செயற்பட்டு தமிழ் மக்களை வகை தொகை இன்றி இனப்படுகொலை செய்த இனப்படுகொலையாளி என்பதும் முன்னிறுத்தப்படவில்லை.
4) தமிழ் மக்களுடைய உரிமைகளை ஏற்க மறுத்து, தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க மறுத்து, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கியவர் என்பது முன்வைக்கப்படவில்லை.
இத்தகைய பிரதானமான குற்றச்சாட்டுகளை இந்த கொழும்பு கிளர்ச்சி முன்வைக்கவில்லை அதை தவிர்த்ததுவிட்டது.
பொருளாதார பிரச்சினைக்கு அடிப்படை காரணம்
இலங்கை பொருளாதார பிரச்சினைக்கு அடிப்படை காரணம் தமிழ் மக்களுடைய இனபிரச்சினை தான் எனவே தமிழர் பிரச்சினைக்கு தீர்வையோ நீதியையோ கூறாமல் தமிழ் மக்களின் உரிமைகளை முன்வைக்காமல் வெறுமனே சகட்டுமேனிக்கு போராட்டத்தில் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைந்து போராடுவோம் என அழைப்பதில் எந்த பயனும் இல்லை. எந்த அரசியல் உள்ளடக்கமும் இல்லை. எனவே தமிழ் மக்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வோடுதான் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
“அரசியல் அர்த்தத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவர்களுக்கான நீதி, தீர்வு என்பவற்றை கட்டாயம் கொழும்பு போராட்டம் முன்வைத்திருக்க வேண்டும்“ என பாசன அபாயசேகர குறிப்பிட்டு கூறுவது கவனத்துக்குரியது.
26 ஜூலை த ஐலண்ட் பத்திரிகையில் முன்னணி வழக்கறிஞர் மொகான் டி சில்வா கூறியதாக செய்தி வெளிவந்துள்ளது. அதில் "தற்போது சிங்கப்பூரில் தங்கி இருக்கும் கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில் அவரை சர்வதேச நீதிமன்றத்தால் விசாரணை செய்யவும் முடியும் அதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் தற்போதைய நிலை
இந்த பின்னணியில் ஈழத்தமிழர்களும் மனித உரிமை ஆர்வளர்களும் இவர் இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை போர் குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விசாரிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.அதற்காக கோட்டாபயவை கைது செய்யும் படி கோரியும் இருக்கிறார்கள். கோட்டாபயவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்வதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தடை இருக்காது என்று இலங்கை சட்ட வல்லுனர்களும் மனித உரிமை அலுவலர்களும் திட்டவட்டமாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் அவரை உள்நாட்டிலும் வைத்து விசாரிக்க கூடிய நிலைமை உண்டு. எனவே அவரை சிங்கப்பூரில் வைத்து கைதுசெய்யப்படாமல் தடுத்து பாதுகாப்பதற்கான பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கும், சிங்கள தலைவர்களுக்கும், சிங்கள மக்களுக்கும், பௌத்த மகா சங்கத்திற்கும் உண்டு.
எனவே அவரை உடனடியாக இலங்கைக்கு வரவழைத்து அவருக்கு விசேட பாதுகாப்பளித்து அனைத்து வகையான வசதிகளையும் செய்து செய்துகொடுக்க வேண்டும்.
புலிகளை அழித்து நாட்டை ஒன்றுப்படுத்திய வெற்றி வீரனை அவமதிக்காமல் பாதுகாக்க வேண்டும். வெளிநாட்டு நீதி விசாரணையாளர்கள் உள்நாட்டில் வந்து அவரை விசாரிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு.எனவே உள்நாட்டில் அவரை விசாரிப்பதற்கு வெளியாருக்கு அனுமதி அளிக்கக்கூடாது. என்று கூறியுள்ளார் மொகான் டி சில்வாவினுடைய இந்த பேட்டிக்கு பின்னால் பல சதிகளும் நாசகார திட்டங்களும் உள்ளன.
அவரை யுத்த குற்றத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்ல வெற்றி நாயகனாகவும் நாட்டை ஒன்றுபடுத்திய வீரனாகவும் சித்தரித்துக்காட்டி சிங்கள மக்களிடம் அனுதாபம் தேடுவதும், அவரை பாதுகாப்பது சிங்கள மக்களின் கடமை என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கான முதல் கட்ட அரசியல் நகர்வுதான் இது.
"யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" இதுவே இவருடைய பேட்டி. இதன் மூலம் மீண்டும் கோட்டாபயவை பெருந்தலைவனாக ஆக்கக்கூடிய வாய்ப்புக்கள் தற்போதும் உண்டு.
இப்போது கோட்டாபயவை மீண்டும் சிங்கள பௌத்தர்களின் தலைவனாகும் முடிவோடு சிங்கள பௌத்த இனவெறியர்கள் செயற்பட தொடங்கிவிட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் தற்போது எதிர்காலத்தில் நிகழக்கூடிய விடயங்களை நுண்மான் நுழை புலனோடு அனுமானிப்பதும், ஆய்வதும் அவசியமானது.
அந்த அடிப்படையில் பார்த்தால் ஜஸ்மின் சுக்காவும் மேற்குலக நாடுகளும் புலிகளும் இணைந்து சிங்கள தேசத்தின் ஒரு தேசபக்தனை பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்தவனை, நாட்டை ஒன்று படுத்திய வெற்றி வீரனை, நாட்டைக் காத்த ஒரு தலைவனை, வஞ்சகத்தனமாக போராட்டக்காரர்களின் மனங்களை திசை திருப்பி மூர்க்கமாக போராட வைத்து சிங்களத்தின் தலைவனை நாட்டை விட்டு துரத்திவிட்டார்கள் என்று மொகான் டி சில்வா சொல்கிறார்.
ராஜபக்சர்கள் மீண்டும் சிம்மாசனத்தில் அமர்வு
ஆதாரமற்ற எழுந்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். அவரை குற்றவாளியாக கூண்டில் நிறுத்த முற்படுகிறார்கள். எனவே கோட்டாபயவை மேற்குலகத்தாரிடமிருந்தும், புலிகளிடமிருந்தும், போலி மனித உரிமைவாதிகளிடமிருந்தும், இவர்கள் அனைவருடைய சதி வேலைகளில் இருந்தும் சிங்கள பௌத்தத்தின் தலைவன் கோட்டாபயவை பாதுகாப்பது சிங்கள மக்களினதும், பௌத்த மகா சங்கத்தினரதும், இலங்கை அரசினதும் பொறுப்பு என்கிறார் மொகான் டி சில்வா.
இதுதான் சாதாரண சிங்கள இனவாதத்தின் முகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே கோட்டாபய ராஜபக்ச மிக விரைவில் நாடு திரும்புவார் என்பது தெரிகிறது. அவருக்கான ஆதரவை இனவாதத்தின் பெயரால் சிங்கள மக்கள் மத்தியில் பெரிய அளவில் திரட்டுவதற்கான சூழல்களும் தோற்றம் பெற்று வருவதை காணமுடிகிறது.
எனவே கொழும்பு கிளர்ச்சியினால் ராஜபக்சக்கள் பதவி விலகினார்கள் என்றோ, நாட்டைவிட்டு ஓடி விட்டார்கள் என்றோ மகிழ்ந்து விடவோ, திருப்தி அடைந்து விடவோ கூடாது. ஏனெனில் இவர்கள் இப்போது தற்காலிகமாக பதவி விலகிப்போய் இருக்கலாம்.
ஆனால் எதிர்காலத்தில் சில வேளைகளில் அவர்கள் ஆயுட்கால பதவிகளைக்கூட வகிக்கக்கூடிய சூழல்கள் தென் இலங்கையில் உருவாகும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதற்கான வாய்ப்புகளும் நிறையவே உண்டு. சில மாதங்களுக்குள் ரணிலை வீழ்த்தி மீண்டும் ராஜபக்சர்களின் குடும்பங்களில் இருந்து மகிந்த ராஜபக்ச மனைவியோ, அல்லது நாமல் ராஜபக்சவையோ ஜனாதிபதி நாற்காலியில் அமரவைக்க முடியும்.
அதற்கு இலங்கை அரசியலமைப்பிலும் இடம் உண்டு. அதேநேரம் நாடாளுமன்றத்திலும் ராஜபக்ச குடும்பத்திற்கு பலம் உண்டு என்பதையும் கவனிக்க தவறக்கூடாது. இந்தகைய எதிர்கால சடுதியான மாற்றங்களுக்கான சமிச்சைகளில் ஒன்றுதான் மொகான் டிசில்வா காட்டினார்.
ரணில் ராஜபக்சர்களை பாதுகாப்பார்
ராஜபக்சர்கள் மீண்டும் சிம்மாசனத்தில் அமர்வதற்கான முரசறைவாகக் கூட மொகான் டி சில்வாவின் கூற்று அமையலாம். இப்போது பொதுஜன பெரமுனவின் காலத்தில் ஊதப்பட்ட பலூன்தான் ரணில் விக்ரமசிங்க. எனவே எந்த நேரத்திலும் அந்த காற்று இறக்கப்படலாம். வேறு ஒருவருக்கு காற்று ஏற்றப்படலாம். அந்த அடிப்படையில் ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக களமிறக்கப்பட்டவர்தான் ரணில் விக்ரமசிங்க. அவர் எந்த சந்தர்ப்பத்திலும் ராஜபக்சர்களை பாதுகாப்பார்.
மாறாக பாதுகாக்க தவறின் அவருடைய பதவி பறிபோய்விடும். எனவே சிங்கள உயர் குழாத்தினருக்கான அதிகாரத்தையும், அதிகார பங்கீடுகளையும் உரியவகையில் பௌத்த மகாசங்கம் பங்கிட்டு வழங்கும்.