ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முக்கிய அங்கமாக, காசாவை நிர்வகிக்க அரசியல் சார்பற்ற 15 பேர் கொண்ட "பாலஸ்தீன தொழில்நுட்பக் குழு" அமைக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன அதிகார சபையின் முன்னாள் துணை அமைச்சர் அலி ஷாத் தலைமை தாங்குவார். இந்தக் குழுவிற்கு எகிப்து, துருக்கி மற்றும் காசா ஆகிய தரப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா எச்சரிக்கை
இரண்டாம் கட்டத்தின் கீழ் ஹமாஸ் உள்ளிட்ட அனைத்து பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்.
அத்துடன் போரினால் சிதைந்த காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் தொடங்கும். காசாவில் உள்ள கடைசி பணயக் கைதியின் உடல் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தவறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.' இந்த இடைக்கால நிர்வாகத்தை மேற்பார்வையிட 'அமைதி சபை' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் தலைவராக இருப்பார். இதன் பிரதிநிதியாக ஐநா-வின் முன்னாள் தூதுவர் நிகோலே மிலாடெனோவ் காசாவில் களப்பணிகளை மேற்கொள்வார்.
காசாவில் களப்பணி
இது குறித்த மேலதிக அறிவிப்புகளை அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் ட்ரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் இந்தத் தொழில்நுட்ப அரசு அமைவதை ஆதரிப்பதாகக் கூறியுள்ளன.
அதேபோல், பாலஸ்தீன அதிகார சபையின் (PA) துணைத் தலைவர் ஹுசைன் அல்-ஷேக், ட்ரம்பின் இந்த முயற்சி அமைதிக்கான புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.