துருக்கி வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது ஈரானிய ஏவுகணை
ஈரானிலிருந்து ஏவப்பட்டு துருக்கியின் வான்பரப்பிற்குள் நுழைந்த இரண்டாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (Ballistic Missile), கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நேட்டோ (NATO) வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை ( 9) உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்குள் நேட்டோ உறுப்பு நாடான துருக்கியைக் குறிவைத்து ஈரானால் ஏவப்பட்ட இரண்டாவது ஏவுகணை இதுவாகும்.
இந்தத் தாக்குதலில் ஏவுகணையின் சிதறல்கள் துருக்கியின் தென் கிழக்கு மாகாணமான காசியான்டெப் (Gaziantep) பகுதியில் விழுந்ததாகவும், எனினும் இதில் உயிர்ச்சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, துருக்கி தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எந்தவித தயக்கமுமின்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, தென்கிழக்கு துருக்கியில் உள்ள தனது குடிமக்கள் மற்றும் அத்தியாவசியமற்ற தூதரக ஊழியர்களை உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இப்பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், துருக்கி தனது வான்பரப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், பதற்றத்தைத் தணிக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.