வடமராட்சியில் காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்
வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன் இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.அகிலன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் அச்சுறுத்தும் தொனியில் செயற்படும் பொலிஸார் - அருட்தந்தை மா.சத்திவேல் கடும் குற்றச்சாட்டு
காணாமல் போன கடற்றொழிலாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர் கடற்படையினருக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதன் அடிப்படையில், குறித்த பகுதி கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாவது நாளாக தேடும் பணி முன்னெடுப்பு
தற்போது கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் தேடுதல் நடவடிக்கைகள் தடைப்படாமல் பாதுகாப்பாக உரிய அறிவுறுத்தலின் பிரகாரம் இடம்பெற்று வருகிறது.
காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இந்திய எல்லைப் பகுதிக்குள் திசை மாறி சென்று இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், விசேட அனுமதி பெற்று மீனவ படகுகள் குறித்த பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நேற்று மாலை கரை திரும்பியிருக்கின்றன.
இந்தியா எல்லைக் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான படகுகள் தென்படாத நிலையில் தொடர்ந்தும் குறித்த கடற்றொழிலாளர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார்.