நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை - முச்சக்கர வண்டிக்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம்
இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை கடந்த முறை லீற்றருக்கு 12 ரூபாயினாலும், இம்முறை 24 ரூபாயினாலும் திருத்தம் செய்யப்பட்டு 36 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த முறை 12 ரூபாயினால் விலை அதிகரித்தபோது முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம் கோரவில்லை என்றும், தற்போது எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானித்துள்ளதாகவும் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
உதிரிப்பாகங்களின் விலை உயர்வு
இவ்வாறு கட்டணத்திருத்தம் செய்யப்படாவிட்டால், ஒட்டுமொத்த முச்சக்கர வண்டித்தொழிலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலைக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகளுக்கு அத்தியாவசியமான உதிரிப்பாகங்களின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.