சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிப்புக்குள்ளான கடற்தொழிலாளர்கள்(Photo)
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கரைவலை சம்மாட்டிமார்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நேற்று(17.10.2022) அதிகாலை 04.00 மணியளவில் படகு ஒன்றில் மீன்பிடிக்க புறப்பட்ட இரு கடற்தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
காலை 06.00 பின்பு தான் கரைவலை தொழில் செய்ய அனுமதி என்ற சட்டம் காணப்படுகின்ற போதும் கட்டைக்காடு சம்மாட்டி ஒருவர் தனது கரைவலையை சரியாக 4.20 மணியளவில் கடலில் வீசியுள்ளார்.
ஆபத்தில் கடற்தொழிலாளர்கள்
இதனால் எதிர்பாராத விதமாக தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் குறித்த கரைவலையில் சிக்கியதுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
நங்கூரம், கத்தி போன்ற ஆபத்தான பொருட்களோடு பலமாக அடிபட்டதில் கடற்தொழிலாளர் ஒருவருக்கு பலத்த காயங்களுடன் மூக்கு, வாயால் இரத்தமும் கசிய தொடங்கியாத கூறப்பட்டுள்ளது.
காலை 06.00 பின்பே கரைவலைக்கு அனுமதி உள்ள போதும் குறித்த சம்மாட்டியின் செயல் கண்டிக்கப்பட வேண்டுமென கடற்தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாதிப்புக்குள்ளான கடற்தொழிலாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்த சம்பவம் கட்டைக்காடு மீனவ சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட அதேவேளை உரிய தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் குறித்த கரைவலை சம்மாட்டிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தொடர்ச்சியாக இந்த பகுதியில் சட்டத்தை மீறிவரும் கரைவலை சம்மாட்டிமார் மீது
கடும் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி சிறு தொழிலாளிகள் கேட்டுகொள்கின்றனர்.



