மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO)
காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதால் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்களை போன்றே மன்னார் - ஓலைத்தொடுவாயில் இறால் வளர்ப்பு பண்ணையினால் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் சங்க செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (13.09.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பண்ணை வளர்ப்புக்கு வழங்கப்படுவது அரச காணிகளாக இருந்தாலும் சரி, தனியார் காணிகளாக இருந்தாலும் சரி நாங்கள் ஏற்கனவே இந்த வளர்ப்பு திட்டங்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை தெரிவிக்கின்றோம்.
இறால் வளர்ப்பு திட்டம்
இந்த இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பில் பல முறைக்கேடுகள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இந்த பண்ணை வளர்ப்பு சீன கம்பனிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், இந்த பண்ணை வளர்ப்பு திட்டத்தை மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக மன்னாரில் இலுப்பைக்கடவை தொடக்கம் தேவன் பிட்டி வரையிலான சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இலுப்பைக்கடவை உள்ளிட்ட சில கிராமங்களில் கடற்தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.
கரையோர கடற்தொழிலாளர்கள்
அட்டை வளர்ப்பிற்காக வழங்கப்படுகின்ற காணிகள் கடற்தொழிலாளர் எதிர்காலத்தில் கடலை மட்டும் நம்பி இருக்காது கரையோரங்களிலும் தமது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு அமைவாக குறித்த பண்ணை திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்கள் யார், வெளிநாட்டு தலையீடுகள் இருக்கிறதா அல்லது வெளிநாட்டு கம்பனிகள் உள்வாங்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகள் வெளியாகியுள்ளன.
கடலில் பிடிக்கப்படுகின்ற 75 கிராமிற்கு குறைவான அட்டைகளைப் பெற்று அதனை பண்ணைகளில் விட்டால் அந்த அட்டைகள் பெருகி உற்பத்தியாகும் என்பது உண்மை.
எனினும் இந்த கிராம கடற்தொழிலாளர்கள் நலம் பெற வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் குறித்த திட்டத்தை குறிப்பிட்ட கிராம கடற்தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.
மாறாக குறித்த திட்டத்தை வெளி மாவட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கும் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
அபிவிருத்தி திட்டங்கள்
மன்னார் பகுதியை எடுத்துக் கொண்டால் இங்கு இடம்பெறுகின்ற பல அபிவிருத்தி திட்டங்களின் போர்வையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், கனிய மண் அகழ்வு போன்ற விடயங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் எம்மால் இதற்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் மன்னார் தீவு பகுதியில் அதிக நிலப்பகுதியில் கடல் நீர் உள்வாங்கப்பட்டு கடல் நீர் கிராமங்களுக்கு வரும் நிலை ஏற்படும்.
காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதால் கடற்தொழிலாளர்கள் எவ்வாறான இடர்களை சந்திக்கின்றார்களோ அதேபோன்று குறித்த இறால் வளர்ப்பு பண்ணையினாலும் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
குறித்த திட்டத்தை யார் முன்னெடுத்தார்களோ அவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண கடற்தொழில் இணையத்தின் செயலாளர் ஜீ. அன்ரனி சங்கர் கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.