காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க இராமேஸ்வர கடற்தொழிலாளர்கள் தீர்மானம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்தொழிலாளர் சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கடற்தொழிலாளர் சங்க தலைவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடற்தொழிலாளர்கள் கோரிக்கை
“இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களையும், படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 115 படகுகளுக்கு தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.
இதில் எஞ்சிய 7 படகுகளுக்கும் அதே சேதமடைந்த 30 படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். வரலாறு காணாத டீசல் விலை உயர்வு காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்ற 1800 லீட்டர் மானிய டீசலை, 3000 லீட்டராக உயர்த்தி தர வேண்டும்” என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தீர்மானங்களை நிறைவேற்ற நடவடிக்கை
இதனை தொடர்ந்து தீர்மானங்களை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக எதிர்வரும் 13ஆம் திகதி தங்கச்சிமடம் வலசை தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தொழிலில் நேரடியாகவும் சார்பு தொழிலாகவும் 10000இற்கு மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் வேலை
இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.