திடீரென நிலத்திற்குள் வந்த கடலலைகள்! பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு(Video)
நாட்டின் சில பகுதிகளில் கடல் அலைகள் திடீரென நிலத்திற்குள் புகுந்துள்ளன.
தெஹிவளை, அம்பலாங்கொடை, மாத்தறை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடல் அலைகள் இவ்வாறு கரையை தாண்டி நிலத்திற்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அக்குரல கஹவ தெல்வத்த பகுதியிலிருந்தும் கடல் அலைகள் காலி - கொழும்பு பிரதான வீதியை வந்தடைந்துள்ளதுடன், இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் குறித்த வீதிகளூடாக அவதானமாக பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குறித்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 அல்லது 3.5 மீற்றர் வரை எழும்புவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.