கடலட்டை பண்ணைகள் விரிவாக்கம் தொடர்பில் ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிவுறுத்தல்
கடலட்டை பண்ணைகள் விஸ்தரிக்கப்படுகின்ற போது, அவற்றின் உரிமையாளர்களாகவும் பயனாளர்களாகவும் அந்தந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று(03.04.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடலட்டை பண்ணைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையிலோ, ஏற்றுமதியாளர்கள் என்ற போர்வையிலோ எங்களுடைய வளங்களும் எங்களுடைய வருமானங்களும் வெளியே ஏற்றுமதி செய்யப்படுகின்ற சூழல் உருவாகக்கூடாது என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

எமது கட்சியின் இந்த நிலைப்பாட்டை பிரதேசவாதமாகவோ, இனவாதமாகவோ, தேசியவாதமாகவோ யாரும் கருதக் கூடாது. கடந்த பல தசாப்தங்களாக அழிவுகளையும் அவலங்களையும் சுமந்து, ஏனையவர்களோடு ஒப்பிடும்போது பின்தள்ளப்பட்ட நிலையில் உள்ள எமது மக்களின் எதிர்காலம் சுபீட்சமடைய வேண்டும்.
கடற்றொழில் அமைச்சர் தலைமையிலான கலந்துரையாடல்
அதற்காக எமது பிரதேசங்களில் உள்ள வளங்களை உச்சபட்சமாக நாமே பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடாகவே இதனை அனைவரும் அணுக வேண்டும் என்பதையே தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம்.
கடலட்டை பண்ணைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

எமது பிரதேசத்திற்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்காக எமது செயலாளர் நாயகத்தின் தீர்க்கதரிசனத்துடன் விரிவுபடுத்தப்பட்ட கடலட்டை உற்பத்தி பாரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையிலேயே தற்போதைய அரசாங்கமும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்தியுள்ளது.
வருமானம் ஈட்டு வழிமுறைகள்
இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது பல்வேறு பரிமாணங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் அது எமது மக்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
குறிப்பாக முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் போன்ற வெளியார் உள்வாங்கப்பட்டால், வருமானத்தின் பெரும்பகுதி வெளியே எடுத்துச் செல்லப்படும்.
இதனால் எமது மக்களுக்கு போதிய பலன் கிடைக்காது. அதேபோன்று இது பூகோள அரசியல் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தப்படக் கூடிய அபாயமும் உள்ளது. எனவே, தற்போதைய முயற்சிகளிலும் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்றார்.
ஹோர்மூஸ் அருகே வெடித்து சிதறிய அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானம்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்..