சாரதி ஒருவரை தாக்கிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபா் மீது அதிர்ச்சியூட்டும் பாலியல் குற்றச்சாட்டு
வீதியில் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடா்பில், ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர், தற்போது சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார்.
சட்ட நிறுவனம் ஒன்றினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இது தொடா்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
வீதியில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடா்பில் அதிா்ச்சியூட்டும் தகவல்கள், சட்ட நிறுவனத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாரதி சார்பில் முன்னிலையாகியுள்ள நீலகண்டன் மற்றும் நீலகண்டன் நிறுவனத்தினர், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது கட்சிக்காரர் சாா்பில் ஜனாதிபதியிடம் கோாியுள்ளனா்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகளில் சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு சாரதியை வீதியில் தாக்கியமை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், பொலிஸின் மருத்துவ சேவைகள் மற்றும் நலப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
எவ்வாறாயினும், நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்டநிறுவனக் கூற்றுப்படி, வீதி சம்பவத்தைத் தொடர்ந்து தமது கட்சிக்காரா், கிாியெல்ல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறைக்குள் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளாா்.
தங்கள் கட்சிக்காரா் நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் சட்ட நிறுவனம் கூறியுள்ளது.
அப்போது இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் குறித்த சாரதியான தமது கட்சிக்காரரை, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தாக்கினார்.
இந்தநிலையில் தங்கள் கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், நிர்வாணமாக புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனா்
இதனையடுத்து தமது கட்சிக்காரர், கிரியெல்ல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது காயங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையில் குறித்த சம்பவத்தை அடுத்து, சாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருக்கு பயந்தநிலையில் உள்ளதாகவும் சட்டநிறுவனத்தினா் குறிப்பிட்டுள்ளனா்.