முல்லைத்தீவு - முத்தையன்கட்டில் உள்ள தமிழர்களின் அறிவியல் அதிசயம் (Photos)
முல்லைத்தீவு - முத்தையன்கட்டில் பேராற்று வழித்தடத்தில் கருங்கல் முறிப்பு அணையொன்று உள்ளது.
தமிழர்களும் அவர்களது அறிவியலும் இன்றுவரை முழுமையாக அறியப்படாது இருக்கின்றது.
இந்தியாவில் கரிகாலச்சோழனின் கல்லணையை நினைவுபடுத்துவதாக முத்தையன்கட்டு மக்கள் கருங்கல் முறிப்பணை தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கருங்கல் அணை
முத்தையன் கட்டுக்குளத்திலிருந்தது பாய்ந்து வரும் மேலதிக நீர் பாயும் சிற்றாறாக அது இருக்கின்றது. ஆற்றின் ஓட்டத்திசையினை மாற்றுவதற்காக அதனை இடைமறித்து கருங்கல் அணை ஒன்று அங்கே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணை இல்லாவிட்டால் பேராற்று வழித்தடத்தில் சேரும் அதிகளவான நீர் மக்கள் குடியிருப்பு, பயிர் நிலங்களை மூடிப் பாயும் என ஆற்றுக்கு அருகில் இருக்கும் வயோதிபர் அது பற்றி குறிப்பிடுகின்றார்.
அவர் இதனை பூதமடுக்கிய கல் எனக் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. இரண்டு மீற்றர் நீளமான கருங்கல், அவற்றிலும் சற்றுக் குறைந்த நீளமுள்ள கருங்கல் துண்டுகளாக அவை அடுக்கப்பட்டுள்ளதோடு அவற்றின் குறுக்குப் பரப்பு அதிகமானவையாகவும் இருக்கின்றன.
இவற்றை சாதாரண மனிதர்களால் தூக்கி அடுக்க முடியாது. இதற்காக பூதங்களை பயன்படுத்தியுள்ளனர். முத்தையன்கட்டை ஆட்சி செய்த முத்தையன் என்ற மன்னனின் பூதங்களே இதனை அமைத்ததாக முத்தையன்கட்டு மக்கள் அந்த அணை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
சிறிய கருங்கல் மலைத்தொடர் ஒன்றினை சார்ந்து இந்த கருங்கல் அணை அமைந்துள்ளது. இந்த மறிப்புத் திருப்பம் ஐம்பது மீற்றரிலும் கூடிய நீளத்தினைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நீரோட்டத்தினை திருப்பியமைக்கவே இந்த அணை அமைக்கப்பட்டுள்ளதை அவதானிப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
நடந்து முடிந்த அடாவடித்தனம்
2009ஆம் ஆண்டு ஆயுத ஈழப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீள்குடியேற்றப்பட்ட முத்தையன்கட்டில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்வுக்கும் திரும்பிக் கொண்டிருந்த வேளை பிக்குமார்களால் இந்த கருங்கல் அணையும் அதனைச் சூழவுள்ள இடமும் தமக்குரியது என வந்து முரண்பட்டுக்கொண்டதாகவும் பின்னர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை அடுத்து அவர்கள் சென்றுவிட்டதாகவும் அதன் பின்னர் யாரும் வரவில்லை எனவும் இளைஞர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த இடம் இப்போது கவனிப்பாரற்று இருப்பதனை குறிப்பிட வேண்டும். தமிழர் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. முத்தையன்கட்டு மக்களும் இது தொடர்பில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
கருங்கல் அணைப் பகுதிக்கு செல்வது நல்லதல்ல. அங்கு பூதங்களின் ஆதிக்கம் இருக்கிறது. தனியாக போகக்கூடாது என்று அப்பகுதி மக்களின் முதியவர்களிடையே கருத்துக்கள் இருப்பதையும் குறிப்பிடுதல் பொருத்தமானதாகும்.
பாதுகாக்கப்பட்ட வேண்டிய கட்டுமானம்
பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி சிறந்த தொழில் வல்லுநர்களால் மேற்கொள்ளப்படும் நேர்த்தியான ஒரு கட்டுமானத்தினை இந்த கருங்கல் அணையில் அவதானிக்கலாம். இந்த கட்டுமானம் தொடர்பில் தெளிவான தகவல்களை பெற்று மக்களிடையே எடுத்தியம்புதல் வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய அறிவியல் இயல்புகளை இந்த அமைப்பின் மூலம் இளையவர்களுக்கு எடுத்துரைக்கலாம் என பொதுக்கட்டுமான பொறியியலாளர் ஒருவரிடம் இது பற்றிய கேட்டல்களின் போது குறிப்பிட்டார். கருங்கற்கள் நேர்த்தியாக வெட்டப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன.
இடைவெளிகளை நிரப்புவதற்காகவும் சிறிய கருங்கல் தட்டுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு ஐந்து அடுக்குகளுக்கு மேலாக இந்த அடுக்குகள் இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருங்கல் பாறைத்துண்டுகளில் மூன்று, நான்கு, ஆறு சிறிய துளைகளையும் சிலவற்றில் தனித்த சிறிய துளைகளையும் அவதானிக்க முடிகின்றது. இவை அக்கற்களை தூக்கிச் செல்ல பயன்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
நல்லதொரு அடித்தளத்தோடு அமைந்திருப்பதால் தான் நீண்ட காலமாக நீரோட்டத்தினை எதிர்த்து நின்று சிதைந்து போகாது இருப்பதாகவும் அவர் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டார்.
இப்போது இந்த கட்டுமானங்களில் மரங்கள் வளர்ந்துள்ளன. அணையின் கல்லடுக்கிடைகளில் மரங்களின் வேர்களால் சிதைவுகள் ஏற்பட்டு இந்த அமைப்பு சிதைந்து போகலாம் என்றும் தொடர்ந்திருந்தார்.
தமிழர் தங்கள் மரபுவழி தடங்களை பாதுகாத்துப் பேணுவதில் அக்கறையில்லாத போக்கு அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியதோடு இது மாற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
ஊருக்குத் தெரியவேண்டும் தன் வரலாறு
ஒவ்வொரு தமிழ் கிராமங்களும் தங்கள் கிராமங்களின் தொன்மை பற்றி அறிந்திருப்பதோடு தொன்மைமிக்க கட்டுமானங்களையும் இடங்களையும் பழைமை மாறாது பேணுவது அவசியமானதொன்றாகும்.
இதுபோன்ற தகவல்களை பெருமையோடு தங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துக்கூறி விளங்க வைக்க வேண்டும்.
நீண்ட பாரம்பரியம் மிக்க இனமொன்று தன் வரலாறை சிதைய விட்டுவிட்டால் நாளை அதன் இருப்பும் அந்த இனத்தின் பெரு மதிப்பும் கேள்விக்குள்ளாகிப் போய்விடும்.
ஊரின் பெயர் விளக்கமும் பெயருக்கு காரணமான நிகழ்வுகளும் அந்த ஊர் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்திருப்பது நன்மை பயக்கும்.