மோசடி கும்பல் குறித்து கவனமாக இருக்குமாறு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை
வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து இளைஞர்,யுவதிகளை ஏமாற்றும் மோசடி கும்பல் குறித்து கவனமாக இருக்குமாறு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
கம்போடியா, மியன்மார், தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் பல பாதாள உலகக்கும்பல் இயங்கி வருவதாகவும், கணினி குற்றங்களுக்கு அவர்களைப் பயன்படுத்தி ஏராளமான இளைஞர்களை சிறையில் அடைத்து பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருவதாகவும் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
இதன்படி, இந்த 04 நாடுகளில் பாதாள உலகக்கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி அவர்களின் உழைப்பு பலவந்தமாக சுரண்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்
'மியாவெட்டி' என்ற பகுதியில் இவர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாருக்கும் தாய்லாந்திற்கும் இடையில் பாயும் நதியின் ஊடாக 'மியாவெட்டி' என்றழைக்கப்படும் மாகாணம் விவசாய நிலம் என்றும், அண்மைக்கால சீன முதலீட்டால் இது குற்றச்செயல்கள் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முகாம்கள் சீன பிரஜைகள் தலைமையிலான பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷ் மற்றும் இலங்கையர்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அவர்கள் சுமார் 5 ஆண்டுகளாக இந்த கணினி குற்றங்களைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள்
இந்நிலையில், மியன்மார் எல்லையில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழுவொன்று இலங்கைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
இவர்களை மீட்பதற்கு 15 கோடி ரூபா பணம் தேவைப்படுவதாகவும், அந்த தொகையை வழங்க இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரின் ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |