கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! பொலிஸ் நடவடிக்கையில் சிக்கிய சாரதி
புதிய இணைப்பு
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வானில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வான் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தவுலகல பொலிஸ் பிரிவில் மாணவி ஒருவரை வானில் வந்த சிலர் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் தொடர்பாக தகவல்கள்
கண்டி - தவுலகல பகுதியில் வானில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (11) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், மாணவியை கண்டுபிடித்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
பாடசாலை மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்படுவது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில்அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
கண்டி - கெலிஓயா பிரதேசத்தில் நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்திச் செல்லப்பட்ட மாணவி
வீதியோரமாக இரண்டு பாடசாலை மாணவிகள் நடந்து வரும்போது, அந்த வழியாக வந்து கருப்பு நிற வான் ஒன்றில் வந்தவர்கள் இரு மாணவியர்களுள் ஒருவரை வானில் உள்ளே தள்ளி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அந்த பகுதியின் ஊடாக பயணித்த மற்றுமொருவர் இதனை அவதானித்து உடனடியாக குறித்த மாணவியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனினும், காப்பாற்றச் சென்ற குறித்த நபரையும் அதே வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும், கடத்தப்பட்ட மாணவி மற்றும் காப்பாற்றச் சென்ற நபர் ஆகிய இருவருக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.