பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை: மீண்டும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதில் சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அறிவுறுத்தலை மீறிய செயற்பாடு
இதனையும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரம் பாடசாலைகளுக்கு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி புத்தகப் பைகளின் எடை தொடர்பில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை 15 முதல் 20 கிலோகிராம் அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
அதன்படி, முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 2 கிலோவாகவும், இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 3 கிலோவாகவும், ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 4 கிலோவாகவும் இருத்தல் வேண்டும்.
பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை ஏழு கிலோவாக இருத்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |