பாடசாலை செல்லும் சிறுமிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு
பாடசாலை செல்லும் சிறுமிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவது குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கவலை தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இன்று(18) உரையாற்றிய அவர், 18 வயதுக்குட்பட்ட இளம் பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பமாவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் இந்த இளம் பெண்கள் மிகப்பெரிய உடல் மற்றும் உளவியல் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும், அவர்களில் பலர் இளம் வயது கர்ப்பம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.
பெற்றோரின் கவனிப்பு
மாணவர்களுக்கு முடிவுகளை எடுக்கத் தேவையான அறிவு மற்றும் புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, பாடசாலைகளில் விரிவான பாலியல் கல்வியை வழங்குவது குறித்து கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பிறக்கும் குழந்தைகளை கைவிடுவதற்கு அல்லது அநாதரவானவர்களாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளைத் தடுப்பது அவசியமாகும்.
இல்லையெனில் அவர்கள் பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் வளர்ந்து பல்வேறு சமூக குறைபாடுகளை எதிர்கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
அறிவியல் கருத்தடை
திட்டமிடப்படாத கர்ப்பத்தின் சுமையும் அதன் விளைவாக ஏற்படும் சமூக களங்கமும் பெரும்பாலும் இளம் பெண்கள் மீது மட்டுமே விழுகின்றன. இதனை நாம் உடைக்க வேண்டும்.
ஒரு குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க ஒருவர் தயாராக இல்லை என்றால், பாதுகாப்பற்ற முறைகளை நாடுவது அல்லது பிறந்த பிறகு குழந்தையை கைவிடுவது குற்றமாகும்.
எதிர்பாராத கர்ப்பங்களைத் தவிர்க்க, அறிவியல் கருத்தடை முறைகளைப் பின்பற்றவும், பொறுப்பான தேர்வுகளை எடுக்கவும் இளைஞர்கள் முன்வரவேண்டும் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



