மு/ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலையின் சாதனை: 40 வருடங்களின் பின் கிடைத்த பெருமை
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுமுகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 40 வருட கால வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளது.
அண்மையில் வெளியான 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளின்படி ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.
சித்தியடைந்த சு.யதிப்சன்
ஆறுமுகத்தான்குளத்தை தன் பிறப்பிடமாக கொண்ட சு.யதிப்சன் அந்த கிராமத்தின் சூழலிலேயே வளர்ந்து வந்தான். மிகவும் பின்தங்கிய அந்த கிராமச் சூழலிலிருந்து தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி அதில் வெற்றியும் பெற்றுள்ளான்.
யதிப்சனின் பரீட்சை சுட்டெண் 425 71 62 என்பதும் குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி 145 ஆகும்.146 புள்ளிகளைப் பெற்று சித்திடைந்துள்ளான்.
அதி கஸ்டப் பாடசாலையாக ஆறுமுகத்தான்குளம் அ.த.க.பாடசலை அமைந்துள்ளது.ஆறுமுகத்தான்குள கிராமமும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை அதிகம் கொண்டது. புலம் பெயர் உறவுகளின் உதவிகளும் இந்த கிராமத்தின் மக்களை வந்து எட்டவில்லை.
இத்தகைய இடர் மிகு சூழலுக்குள்ளும் யதிப்சனினால் இந்த சாதனையை எட்ட முடிந்தது தனக்கும் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களுக்கும் பெருமையாக இருப்பதாக பாடசாலையின் அதிபர் திரு ந.தணிகாசலம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
தாயாரின் கருத்து
முன்பள்ளி ஆசிரியையாக கடந்த முப்பதாண்டுகளாக கடமையாற்றி வரும் அவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். யதிப்சனின் மூத்த அக்கா யாழ்.பல்கலைகழகத்தில் ஊடகத்துறையில் இரண்டாம் வருட மாணவியாக தன் கல்வியைத் தொடர்கின்றார்.
இரண்டாவது அக்கா 2022 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சையை எழுதி விட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றார்.
யதிப்சனின் விடா முயற்சியும் அவனது ஆசிரியர்களின் அக்கறையும் அவர்கள் கூடிய கவனமெடுத்து அவனை ஊக்கமளித்து கற்றுக் கொடுத்ததும் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.
யதிப்சனின் தந்தை கூலி வேலை செய்வதாகவும் தன் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போதும் கல்வியைத் தொடர்வதில் தான் கூடிய கவனமெடுப்பதாகவும் தன்னைத் தொடரும் வறுமையின் துயரம் தன் பிள்ளைகளை தொடரக்கூடாது எனவும் யதிப்சனின் அம்மா கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஆறுமுகத்தான்குளம் கிராமம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை கிராமத்தினை அடுத்து அமைந்துள்ளது ஆறுமுகத்தான்குளம். குமுழமுனை தண்ணிமுறிப்பு வீதி இந்த கிராமத்தினை ஊடறுத்துச் செல்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகத்தான்குளம் என்ற குளத்தை ஒட்டி அமைந்த இந்த கிராமம் அந்த குளத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றது.பொதுவாக வன்னியின் கிராமங்களில் பல அதன் பெயரின் ஈற்றில் குளம் என்ற சொல்லைக் கொண்டு முடிவடைவதனையும் அவை குளம் சார்ந்து அமைந்துள்ளமையும் குறிப்பிடலாம்.
ஆண்டான்குளம், உடுப்புக்குளம், வன்னிவிளாங்குளம், கனகராயன்குளம், போன்ற கிராமப்பெயர்களை இதனை புரிந்துகொள்ள இட்டுக்காட்ட முடியும்.
ஆறுமுகத்தான்குள மக்கள் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் சார்ந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் நீண்ட காலமாக சிக்கித் தவித்து மீளத்துடிக்கும் மக்களை கொண்ட கிராமம் இது என அந்த கிராமத்தின் சார்பாக பேசவல்லவர்கள் குறிப்பிட்டனர்.
1981 ஆம் ஆண்டில் அப்போதைய உதவியரசாங்க அதிபர் சிங்காரவேலர் அவர்களால் ஆறுமுகத்தான்குளம் அ.த.க.பாடசாலையும் அதனுள்ளே இருக்கும் முருகன் ஆலயமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது எனவும் மேலும் அவர்கள் குறிப்பிட்டமையும் சுட்டிக்காட்டல் பொருத்தமானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |