யாழ் சித்தங்கேணி இளைஞன் படுகொலை - பொலிஸார் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சித்தங்கேணி இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பு
இந்த வழக்கில் 50ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா,
இன்று பிற்பகல் ஆரம்பாகி இதுவரை நடைபெற்ற மரண விசாரணையின் அடிப்படையில் யாழ்ப்பாண நீதவான் சில கட்டளைகளை வழங்கினார். இன்றைய தினம் ஐந்து சாட்சியங்கள் தமது சாட்சிகளை பதிவு செய்தனர்.
அதில் மூன்றாம் சாட்சி, இறந்தவருடன் தானும் தாக்குதலுக்கு இலக்காகியதாக கூறியதை கொண்டு சாட்சி பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறிய இரண்டு பொலிஸார் மற்றும் அங்க அடையாளங்களை கூறிய மூவர் ஆகிய ஐவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு கட்டளையிடப்பட்டது.
பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தாக்கப்பட்டதாக கூறியதையடுத்து, குறித்த இடங்களை விஞ்ஞான ரீதியாக அடையாளம் காண சாட்சியை அழைத்து செல்ல உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.
மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயார்: பொதுமன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை
நீதிமன்ற அனுமதி
இதன்போது சாட்சியின் பாதுகாப்பு கருதி இரண்டு சட்டத்தரணிகள் உடன் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் காயத்தை விபரித்ததோடு காயம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே பிரதான காரணம் என கூறியதன் அடிப்படையில் நீதிமன்றம் கட்டளையை வழங்கி இருக்கிறது.
மரண விசாரணைகளுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் பயணத்தடை பொலிஸார் மேற்கொள்ள முடியும் என நீதிமன்றம் பணித்ததால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதன்போது தங்களது விசாரணையில் நான்கு பொலிஸார் அடையாளம் காணப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன் சாட்சியின் அடையாளத்தை கொண்டு மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இதுவொரு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய நடவடிக்கையில் யாழ்ப்பாணம், வவுனியா என பல இடங்களில் இருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர். விசாரணை தொடர்ந்து விரைவாக இடம்பெற ஏதுவாக எதிர்வரும் திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.” என்றார்.
சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தின் பேரிலே இன்றையதினம் சாட்சியமளித்த ஐந்து சாட்சிகளிலே மூன்றாவது சாட்சியாக சாட்சியமளித்த நபர் இறந்தவர்களுடன் சமகாலத்தில் தானும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த சாட்சி தனது வாக்குமூலத்திலே தான் பொலிஸ் நிலையத்திற்கு வெளியிலே சில இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் குறித்த இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று அந்த இடங்களை அடையாளம் காட்டுவதற்கும், விஞ்ஞானபூர்வமான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்குமாக கட்டளை ஒன்றை ஆக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட நபரை அழைத்து செல்லும் பொழுது அவருடைய நலன்களை உத்திரவாதப்படுத்துவதற்கு சட்டத்தரணிகளால் பெயர் குறிப்பிடப்பட்ட இரண்டு சட்டத்தரணிகள் அவருடன் செல்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது.
இன்றையதினம் மன்றுக்கு சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி, இறந்தவருடைய உடலில் காணப்பட்ட காயங்களை விவரித்ததோடு அந்த காயங்கள் தொடர்பான அபிப்பிராயத்தையும், காயங்கள் மூலமாகத்தான் மரணம் ஏற்பட்டுள்ளது என்பதனையும், மரணம் ஏற்படுவதற்கு அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டது தான் பிரதான காரணம் எனவும் கூறியுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |