கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி பகுதிக்கு கொழும்பில் இருந்து ஸ்கானர் இயந்திரத்துடன் வந்த குழு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் அகழ்வு பணியின் 5ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (24)முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியினை ஆய்வுசெய்வதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஷேட ஸ்கான் இயந்திரம்
இதுவரை 26 மனித உடலங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் இன்று மேலும் பல மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது, எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிய முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வீதியின் ஊடாகவும், ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி இன்றும் (24) முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வுப் பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. அத்துடன் துப்பாக்கிச் சன்னங்களும், குண்டுச் சிதறல்களும் மீட்கப்பட்டன.
பேனா மாக்கர் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இன்று விசேட ஸ்கானர் மூலம் இந்தப் புதைகுழி எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது எனப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவுகள் நாளை (25.11.2023) அகழ்வுப் பரிசோதனை நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும். இந்த மனிதப் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும், நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகளை எம்மால் உறுதியாகக் கூற முடியும்." - என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்- ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |