ரோயல் பார்க் கொலை விவகாரம்! மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றவாளிகளை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரருக்கு மைத்திரிபால சிறிசேன 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை மீறிய மைத்திரி
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தற்போது வெளிநாட்டில் உள்ள பிரதிவாதியை உள்நாட்டு மற்றும் சர்வதேச சாசனங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்துவர தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் செல்லுபடியற்றது என கோரி பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பின் போது எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை அறிவித்துள்ளது.
கொலையின் பின்னணி
2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, குற்றவாளியான ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவின் காதலியின் சகோதரியான 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டையைக் கொண்டு கழுத்தை நெரித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்ப்ட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 2019 நவம்பர் 9 அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த குற்றவாளியை விடுவிக்க தான் பணம் பெற்றதாக கூறப்படுவதை மறுத்திருந்தார்.
எனினும் அவருக்கு மன்னிப்பளிக்க, அவரது குடும்பத்தாரை தன்னிடம் அழைத்து வந்து தொடர்ச்சியாக கோரிக்கை அளித்தவர் ரத்ன தேரர் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததுடன், குற்றவாளியின் குடும்பத்தினரிடமிருந்து பிறிதொரு தரப்பு பணம் பெற்றுள்ளதாகவும், கூறினார்.
இந்நிலையிலேயே தனது பெயரையும் தொடர்புபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து குறித்து ரத்ன தேரர் முறைப்பாடும் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |