லெபனானில் மர்ம இரசாயனப் பொருட்களை வீசிய இஸ்ரேல்
தென் லெபனானில் உள்ள விவசாய நிலங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் இனந்தெரியாத இரசாயனப் பொருளை வான்வழியாக வீசியுள்ளதாக, லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் இடைக்கால அமைதி படை (UNIFIL) தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான்–இஸ்ரேல் என்பனவற்றை பிரிக்கும் எல்லைக் கோடான “ப்ளூ லைன்” அருகே, ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக வழமையான பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்ததாக ஐக்கிய நாடுகள் இடைக்கால அமைதி படை குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் லெபனானின் மீது விமானங்கள் மூலம் அடையாளம் தெரியாத இரசாயனப் பொருட்களை வீசியது இது முதல் முறை அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நடவடிக்கைகள், 2006 ஆம் ஆண்டு ஹெஸ்புல்லா–இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டுவந்த ஐ.நா. தீர்மானம் 1701-க்கு முரணானவை என்றும், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்நடவடிக்கைகள் ஐ.நா அமைதி படையினரின் உடல்நலத்திற்கும், அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் இராணுவம் “விஷமில்லாத ஒரு இரசாயனப் பொருள்” மட்டுமே வீசப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
எனினும், அதன் விஷத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் படையினர் லெபனான் இராணுவத்துடன் இணைந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் மாதம் முதல் ஹெஸ்புல்லாவுடன் நடைமுறையில் போர் நிலை ஏற்பட்டதையடுத்து, தென் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், திட்டமிட்ட முறையில் சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் “சுற்றுச்சூழல் அழிப்பு” (Ecocide) என கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri