அனோஜன் விவகாரத்தில் அவசர தலையீடு: வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாட ரிசாட் எம்.பி முயற்சி
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், வெளியுறவு அமைச்சருடன் நேரடியாகப் பேசுவதற்குத் தான் முயற்சித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக் கருத்தை முன்வைத்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: "சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் கல்முனை, நற்பிட்டிமுனை இளைஞர் அனோஜனின் நிலைமை தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் உடனடியாகப் பேசுவதற்குத் தொடர்பு கொண்டேன்.
இராஜதந்திர நடவடிக்கை
எனினும், அவர் தற்போது உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதால் அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

இருப்பினும், இப் பாரதூரமான விவகாரத்தில் இளைஞரின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிய சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.