அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்பு குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை: முபாறக் அப்துல் மஜீத் தெரிவிப்பு
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி ஊடகங்களோ அல்லது அங்குள்ள இலங்கைத் தூதரகமோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என இலங்கை உலமா கட்சியின் தலைவரும் முப்தியுமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
சவூதியில் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்படும் என்றும், சவூதி பத்திரிகைகளில் அரசு அதனை வெளியிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை அப்படியே நம்பி செயற்படுவதற்குப் பதிலாக உண்மையைக் கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "சவூதி அரேபியா சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் ஒரு நாடாகும். மன்னர் பைசலை படுகொலை செய்த சவூதி அரச குடும்பத்து இளவரசனுக்கே அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா விடுத்த கோரிக்கையையும் சவூதி பொருட்படுத்தவில்லை. அங்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டால் அடுத்த வாரமே பத்திரிகைகளில் அரசு அறிவிக்கும். ஆனால், அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகத் தகவல்கள் இல்லை.

இவ்வாறான சூழலில், அனைவரும் சேர்ந்து அதிகளவில் சத்தமிடுவது விபரீதமான முடிவுகளுக்கே வழிவகுக்கக்கூடும்" என அவர் எச்சரித்துள்ளார்.
அண்மையில் கதிர்காமத்திற்குச் சென்ற நாயை உதைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ஏழைப் பெட்டிக்கடைக்காரனின் சம்பவத்தை உதாரணமாகக் குறிப்பிட்டு, மனிதர்களின் சுயநலப் போக்கை விமர்சித்துள்ளார்.
வேண்டுகோள்
"தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட போதிலும், அந்த ஏழைப் பெட்டிக்கடைக்காரன் கைது செய்யப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் பிணை கட்டியே வெளிவந்துள்ளான்.
அவனது குடும்பம் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் நிலையில், எந்தவொரு தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது சிவில் அமைப்புகளோ அவனது வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறவில்லை. மன்னிப்புப் பற்றிப் பேசுபவர்கள் அந்த ஏழையை மன்னிக்க முன்வரவில்லை.

மனிதர்கள் பொதுவாகத் தனக்கு ஆபத்து என்றால் சகிப்பதில்லை, மற்றவனுக்கு ஆபத்து என்றால் சந்தோஷப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாயை உதைத்த சம்பவத்தை வைத்து இனவாதத்தைப் பேசி இனங்களிடையே கசப்புணர்வை உருவாக்கியவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என சுட்டிக்காட்டி
இனியாவது இனவாதம் மற்றும் மதவாதங்களை ஒழித்து மனிதாபிமானத்தை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டரீதியான நடவடிக்கை
இதேவேளை, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் தன்னாலான அனைத்து பங்களிப்புகளையும் வழங்க வேண்டும் என தம்பலாகாமம் பிரதேச சபை தவிசாளர் எச். தாலிப் அலி தெரிவித்துள்ளார்.
சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தேவையான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மன்னித்து மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.