ஜனாதிபதி கொலைச் சதி என வெளியான CCTV காட்சிகள்! ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். தனது சட்டத்தரணிகள் ஊடாக ஹோட்டல் நிர்வாகத்திற்கு சட்டக் கடிதமொன்றை அவர் அனுப்பியுள்ளார்.
ஹோட்டலில் தான் சென்றிருந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகள் திரிபுபடுத்தப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் தவறான தலைப்புடன் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சரத் வீரசேகர
கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் சரத் வீரசேகர ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஹோட்டல் நிர்வாகம் சில சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவரது தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

திருத்தப்பட்ட காணொளியில், சரத் வீரசேகரவும் பௌத்த பிக்குவொருவரும் ஒரே நேரத்தில் ஹோட்டல் அறைக்குள் நுழைவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்தக் காட்சிகள் ‘ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கான சதி’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசிய சிசிடிவி காட்சிகள்
சரத் வீரசேகரவின் செயலாளரை தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனத் தவறாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஹோட்டலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய இரகசிய சிசிடிவி காட்சிகள் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் தனது கட்சிக்காரரின் தனியுரிமைக்கும் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறான தவறான தகவல்களையும் காட்சிகளையும் பரப்புவது 2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தின் 20ஆவது பிரிவின் கீழ் குற்றமாக அமையக்கூடும் என்றும் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
you may like this video