சாரா ஜெஸ்மின் இறந்தாரா:மரபணு பரிசோதனைக்காக மீண்டும் தோண்டப்படும் உடல்கள்
புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜெஸ்மின் சம்பந்தமான மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர்களின் உடல் பகுதிகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர்,சாய்ந்தமருது பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பில் வயது வந்தவர்கள் மற்றும் பிள்ளைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டதாகவும் எனினும் அந்த இடத்தில் சாரா ஜெஸ்மின் என்பவரின் உடல் இருப்பது மரபணு பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் சாரா ஜெஸ்மின் தொடர்பில் உறுதியாகவில்லை என்பதால், மீண்டும் ஒரு முறை உடல் பாகங்களை தோண்டி எடுத்து பரிசோதனை நடத்த விசாரணை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதனடிப்படையில் அம்பாறை பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் பகுதிகள் மரபணு பரிசோதனைக்காக இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை நீதவான், ஆரம்பத்தில் விசாரணைகளில் சம்பந்தப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி, ஏற்கனவே விசாரணைகளை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் உடல்களின் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.



