குமார் சங்கக்காரவுக்கு விமான நிலையத்தில் நேர்ந்த அவமதிப்பு! விமான நிறுவனத்திடமிருந்து வெளியான பதில்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், முன்னாள் அணித்தலைவருமான குமார் சங்கக்கார, தனது பிறந்தநாளுக்கு மறுநாள் அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் விரும்பத்தகாத அனுபவத்தை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான சாதனைகளைப் படைத்ததுடன், கண்ணியமான மற்றும் அமைதியான நடத்தைக்காகவும் உலகளவில் அறியப்படும் சங்கக்கார, ரயன்எயர் (Ryanair) விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தமக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாகுபாடான மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேர்ந்த அவமதிப்பு
கடந்த 27ஆம் திகதி தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சங்கக்கார, மறுநாளான 28ஆம் திகதி டப்ளினிலிருந்து பிரிஸ்டல் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட அவர், டப்ளின் விமான நிலையத்தில் ரயன்எயர் ஊழியர்களிடமிருந்து இத்தகைய பாகுபாடான அணுகுமுறையை எதிர்கொண்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Has anyone experienced discriminatory gate personnel @Ryanair in Dublin ? I with my family just did and it was shocking. The tone of address and the mishandling of procedure and threatening behavior. Unacceptable for any passenger. First bad experience in Dublin
— Kumar Sangakkara (@KumarSanga2) October 28, 2026
ஊழியர்கள் பேசிய விதம், நடைமுறைகளைக் கையாண்ட விதம் மற்றும் அச்சுறுத்தும் வகையிலான நடத்தை ஆகியவை அதிர்ச்சியளிப்பதாகவும், எந்தவொரு பயணிக்கும் இத்தகைய அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டப்ளினில் தனக்கு ஏற்பட்ட முதலாவது விரும்பத்தகாத அனுபவம் இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அங்கு இடம்பெற்ற உரையாடல் அல்லது சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.
சங்கக்காரவின் குற்றச்சாட்டு
இதற்கிடையில், டெய்லி மெயில் ஊடகத்துக்கு ரயன்எயர் நிறுவனம் வழங்கிய விளக்கம் சங்கக்காரவின் குற்றச்சாட்டிலிருந்து மாறுபட்டதாக உள்ளது. கட்டாய குடிவரவு ஆவணப் பரிசோதனையின்போது, ஊழியர் ஒருவர் கோரிய விசா ஆவணங்களை குறித்த பயணி வழங்க மறுத்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னர் கலந்துரையாடலின் ஊடாக அந்த ஆவணங்கள் வழங்கப்பட்டதாகவும், பயணத்திற்கான தகுதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், திட்டமிட்டபடி ஒக்டோபர் 28ஆம் திகதி டப்ளினிலிருந்து பிரிஸ்டல் சென்ற விமானத்தில் குறித்த பயணியும் அவரது குடும்பத்தினரும் பயணித்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், விமானப் பயணம் மறுக்கப்பட்டதாக அல்லாமல், ஆவணப் பரிசோதனையின்போது ஊழியர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பிலேயே சர்ச்சை எழுந்துள்ளது.
சங்கக்காரவின் பதிவு சில மணிநேரங்களுக்குள் பெரும் கவனத்தைப் பெற்றதுடன், சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தையும் ஏற்படுத்தியது. பிரித்தானிய ஊடகவியலாளர் பியர்ஸ் மோர்கன், சங்கக்காரவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சங்கக்காரவைப் போன்ற கண்ணியமான ஒருவரைத் தான் அரிதாகவே சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயம் குறித்து ரயன்எயர் நிறுவனம் விரைவாகவும் முறையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெரும் அதிர்ச்சி
இலங்கைத் தொழில்நுட்பத் தொழில்முனைவோரும் WSO2 நிறுவனத்தின் நிறுவுநருமான சஞ்சீவ வீரவர்ணவும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
பல தசாப்தங்களாக மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தும் பயணித்தும் வரும் நிலையில், தானும் இத்தகைய பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த சங்கக்கார, இத்தகைய அனுபவத்தைத் தாமே எதிர்கொள்ளும்போது அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிலர் ரயன்எயர் ஊழியர்களிடமிருந்து ஆசியப் பயணிகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாகுபாடான அணுகுமுறைகள் மற்றும் பயணப் பொதிகள் தொடர்பான கடுமையான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். நிறுவனத்திடம் மன்னிப்புக் கோரிக்கை அல்லது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, விமான நிறுவனத்தின் விதிமுறைகளைச் சிலர் ஆதரித்ததுடன், இந்தச் சம்பவம் பாகுபாட்டை விட ஊழியர்களின் கடுமையான அணுகுமுறையாக இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எனவே, சங்கக்கார முன்வைத்துள்ள குற்றச்சாட்டும், ரயன்எயர் நிறுவனம் அளித்துள்ள விளக்கமும் தனித்தனியாகக் கவனிக்கப்பட வேண்டியுள்ளன.