ராஜபக்சக்களின் நெருக்கமான நபரின் சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்
கஜ்ஜா கொலை வழக்கு தொடர்பில் துபாயில் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் கொலை திட்டத்தின் பல இரகசியங்கள் எதிர்காலத்தில் வெளிப்படும் என்றும் கூறப்படுகின்றது.
கஜ்ஜா" கொலை வழக்கில் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என்றழைக்கப்படும் அனுஷா லக்மாலி துபாயில் கைது செய்யப்பட்டு, நேற்று (27) துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
3 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு விசாரணை
மித்தெனிய, கட்டுவன பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான அனோஷா லக்மாலி என்ற அச்சினி என்ற பெண் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 3 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அச்சினிக்கு, கஜ்ஜாவுடன் மிகவும் நெருங்கிய உறவு இருந்தமையும், கொலை நடந்த நாள் முழுவதும் இருவரும் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டமையும் தெரியவந்துள்ளது.
மேலும், தொலைபேசித் தரவுகளை ஆய்வு செய்ததில், கஜ்ஜாவின் தொலைபேசிக்கு வந்த கடைசி சில அழைப்புகள் அச்சினியிடமிருந்து வந்தவை என்பதும் தெரியவந்துள்ளது.
கொலை இடம்பெற்ற உடனேயே, அவர் கடவுச்சீட்டை தயாரித்து, மார்ச் 5 திகதி தாய்லாந்தின் பாங்காக்கிற்கு புறப்பட்டுள்ளார் இதன் பின்னர் அவர் மலேசியாவிற்கும், அங்கிருந்து துபாயில் உள்ள ஷார்ஜாவிற்கும் தப்பிச்சென்றுள்ளார்.
தொழிற்சாலையில் தலைமறைவு
இதனையடுத்து ஷார்ஜாவில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்து தலைமறைவாகி வாழ்ந்துள்ளார்.
இருப்பினும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் தொடர்ந்து அவரை தேடி வந்ததால், நாட்டிற்கு திரும்ப முயன்றபோது, ஆகஸ்ட் 30 துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு, குற்றப் புலனாய்வுத்துறையின் சிறப்பு குழு துபாய்க்கு சென்று, அவரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த கொலைக்கு பின்னால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக்கும்பல் உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக உறுப்பினர்களான பெக்கோ சமன் மற்றும் கெஹெல்பத்தர பத்மே ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இதன் மூல காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில், அச்சினி கஜ்ஜாவாவை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தமை தெரியவந்துள்ளது.
வங்கிக்கணக்குகளில் சிக்கிய பணம்
கொலையில் பயன்படுத்தப்பட்ட டி-56 ரக ஆயுதத்தை முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான மனம்பேரி கொண்டு வந்திருந்தார் என்றும், இதற்காக கூலிப்படையினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த பணத்தின் ஒரு பகுதியை கொலையாளிகளின் வங்கிக்கணக்குகளில் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கருதப்படும் கஜ்ஜா, தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வலைத்தள நேர்காணலில் கலந்துக்கொண்டு ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை மற்றும் வெள்ளை வான் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்ட சில நாட்களுக்கு பிறகு, அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டிருந்தார்.
தொலைபேசி அழைப்பில் தொடங்கிய கொலை திட்டத்தின் தீர்க்கப்படாத பல இரகசியங்கள் எதிர்காலத்தில் அவரது வாக்குமூலங்கள் மூலம் வெளிப்படும் என்றும் கூறப்படுகின்றது.