மீண்டும் இலக்கு! கருணா உள்ளிட்டோர் மீதான பிரித்தானியாவின் தடை தொடர்பில் கொதித்தெழும் மகிந்த தரப்பு
வடக்கு மக்கள் யுத்தத்தை மறந்து விட்டு சிங்கள தலைவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில் இராணுவத்தினர் மீண்டும் இலக்கு வைக்கப்படுவது பிரச்சினைக்குரியது. இவ்விடயத்தை அலட்சியப்படுத்த போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரித்தானியா விதித்துள்ள தடை
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,''சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
உலகில் மிகவும் பயங்கரமான அமைப்பாகவே விடுதலைப் புலிகள் அமைப்பு அடையாளப்படுத்தப்பட்டது. கொடிய பயங்கரவாத அமைப்பை முழுமையாக இல்லாதொழித்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இராணுவத்தின் உயர் அதிகாரிகளை ஏன் பழிவாங்க வேண்டும். எவரது நோக்கம் செயற்படுத்தப்படுகிறது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. இதன் பின்னணியில் யார் உள்ளார்.
பிரித்தானியாவினால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டுக்கும்,சர்வதேசத்துக்கும் திட்டவட்டமாக குறிப்பிட வேண்டும்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எதற்கும் மகிந்த ராஜபக்ச இடமளிக்கவில்லை. அப்போது தோல்வியடைந்த முயற்சிகளை தற்போது வெற்றிக்கொள்ள ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
ஆகவே பிரித்தானியாவின் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.''என கூறியுள்ளார்.
