எம்மை இனவாதிகள் என விமர்சித்துக்கொண்டு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முயற்சிக்காதீர்கள்! சபையில் சாணக்கியன்
எம்மை இனவாதிகள் என்று விமர்சித்துக் கொண்டு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முயற்சிக்காதீர்கள், எம் மக்கள் உண்மையைத் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆணையாளரின் அறிக்கை
மேலும் தெரிவிக்கையில், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றுகையில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். அரசு குறிப்பிடுவதை ஏற்காவிடின் ஆணையாளரின் அறிக்கையைப் பாருங்கள் என்று குறிப்பிட்டார்.
ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையைச் சபை முதல்வர் திரிபுபடுத்தி சபையில் விடயங்களை முன்வைத்தார். பொய்யை மாத்திரம் முன்னிலைப்படுத்திச் செயற்படும் அரசு இவ்வாறு திரிபுபடுத்திப் பேசுவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. ஆணையாளரின் அறிக்கையில் 2 மற்றும் 3ஆம் பக்கங்களில். 'அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவும், அதற்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் மாற்றீடு சட்டத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சபை முதல்வர் இதனைப் பார்க்கவில்லையா? பெருந்தோட்டப் பகுதிகளில் ஏழ்மை தீவிரமடைந்துள்ளது. மலையக மக்களுக்கு 2138 ரூபா சம்பளம் வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி அளித்தது. கடந்த அரசு 1350 ரூபா சம்பளம் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இன்று 2 ஆயிரம் ரூபா பற்றி எவ்வித முன்னேற்றமும் இல்லை.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை
ஆகவே, பெருந்தோட்ட மக்கள் பற்றி ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களைப் பாருங்கள். சபை முதல்வர் குறிப்பிடுவதைப் போன்று ஆணையாளரின் அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம், பெருந்தோட்ட மக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை பற்றி ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழன் பத்திரிகையின் ஆசிரியர் சிவராஜாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகை ஆசிரியர் சிவராஜா கொழும்பில் உள்ளார். ஊரில் உள்ள அவரது தாயாரிடம் 'உங்களின் மகனின் பேஸ்புக் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அவரை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளர் குமணன் ரி.ஐ.டியால் விசாரிக்கப்பட்டுள்ளார். 'விசாரணைகளின்போது கேட்கப்பட்ட விடயங்களை வெளியில் சொல்ல வேண்டாம், அவ்வாறு சொன்னால் பார்த்துக் கொள்கின்றோம்' என்று குமணனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கு ஆதரவளித்துள்ளார்கள் என்று சபை முதல்வர் குறிப்பிடுகின்றார்.
மக்களாணை நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிவடைந்துவிட்டது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தோல்வியடைந்துள்ளீர்கள். டக்ளஸ் தேவானந்தாவுடன் ஒன்றிணைந்து நாங்கள் எந்த அதிகார சபைகளிலும் ஆட்சியமைக்கவில்லை. ஆனால், நீங்கள் பிள்ளையானுடன் ஒன்றிணைந்து மட்டக்களப்பில் ஆட்சி அமைத்துள்ளீர்கள். வெட்கம் என்ற ஒன்று உங்களுக்கு இல்லையா? பிள்ளையானுடன் ஒன்றிணைந்து வாகரை பிரதேச சபையில் ஆட்சி அமைத்துள்ள கட்சி என்று நீங்கள் வெட்கம் அடையுங்கள்.
தேசிய உரிமை
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜீவன் தொண்டமான், ரிஷாத் பதியுதீன் ஆகியோரை விமர்சித்தீர்கள். ஆனால், அவர்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளீர்கள். வெட்கம் என்பது உங்களுக்கு இல்லையா?! தேசிய உரிமையைக் கோரும் எம்மை இனவாதிகள் என்று விமர்சிக்கும் நீங்கள்தான் உண்மையான இனவாதிகள். ஆகவே, கண்ணாடி அறையில் இருந்துகொண்டு கல்லெறியாதீர்கள். காணிப் பிரச்சினைக்கு என்ன தீர்வை இந்த அரசு வழங்கியுள்ளது.
பலாலி மற்றும் மயிலிட்டி இராணுவ முகாம்களுக்குள் இருந்த இரண்டு கத்தோலிக்கத் தேவாலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம், பலாலி புனித செபஸ்டியன் தேவாலயம் என்பனவே உடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்தப் பகுதியில் பிள்ளையார் கோயில் உடைக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்புக்கான கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற நிலையில் யாழ். தையிட்டி பகுதியில் தனியார் காணியில் போராட்டத்துக்கு மத்தியில் விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. நீதி எங்கு செயற்படுத்தப்படுகின்றது? எம்மை இனவாதிகள் என்று விமர்சித்துக் கொண்டு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முயற்சிக்காதீர்கள். எம் மக்கள் உண்மையைத் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
