ஜனாதிபதிக்கு கூட்டமைப்பின் தலைவர் அனுப்பியுள்ள அவசர கடிதம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடு தொடர்பில் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடு தொடர்பில் இனிமேலும் தாமதிக்கக்கூடாது. கடந்த ஜூன் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் பிறிதொரு தினத்தில் அந்த சந்திப்பு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சந்திப்பை நடத்துவதற்கான திகதி, மீள நிர்ணயிக்கப்படும் என அறிவித்து இரண்டு கடிதங்கள் அதன் பின்னர் தமக்கு கிடைத்துள்ளது.
எனினும் அதற்கு பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.தாங்கள் விரும்புகின்ற போது சந்திப்பதற்கு தயாராகவுள்ளோம்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அது போதாதென கருதி 1988 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு காத்திரமான அதிகார பரவலாக்கலை ஏற்படுத்துவதற்காக 13 ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்த இணங்கியதுடன், அதற்காக பெருமளவு கருத்தொருமைப்பாடு ஏற்பட்டுள்ளதையும் நினைவுபடுத்தியுள்ளார்.
1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு தயாரிப்பிற்கு முறையே 2 வருடங்களும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தை எடுத்தபோதிலும், தற்போதைய நடைமுறை கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.
எனவே, இந்த நடைமுறை இனிமேலும் தாமதிக்கப்படாது என உறுதிப்படுத்துமாறும் ஜனாபதி கோட்டாப ராஜபக்ஸவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை,குறித்த கடிதத்தின் பிரதியொன்றினையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.