அமெரிக்காவால் ஏமாற்றப்பட்டேன்: அம்பலப்படுத்திய சம்பந்தன் - காலம் கடந்து வெளிவரும் தகவல் (Video)
அமெரிக்காவும், இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது சம்பந்தன் வெளிப்படையாக கூறினார் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான நிக்சன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், சம்பந்தனை பொறுத்தவரை இப்போது ஓய்வுபெற வேண்டிய அல்லது ஓய்வு பெறக்கூடிய தேவை இருக்கிறது என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கக்கூடிய காலம் இதுவல்ல.
அது முன்னரே செய்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது ஏன் அந்த தேவை வருகிறது என்றால் அடுத்த ஆண்டு தேர்தல். நாடாளுமன்றத் தேர்தல் சிலவேளைகளில் ஒத்திவைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது.
அதற்கு முன்னதாக ஏதாவது முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதை மையமாக வைத்து அரசியல் நோக்கத்தில் தான் இந்த கோரிக்கை விடப்பட்டிருக்கிறது என்பது தெரிகின்றது.
சம்பந்தன் நாடாளுமன்றில் பதிவு செய்த விடயம்
அடுத்ததாக சம்பந்தனை பொறுத்தவரையில் அவர் மீது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் சரியோ பிழையோ 2009ஆம் ஆண்டு யுத்தம் சாட்சியங்கள் இன்றி வன்னியில் நடத்தப்பட்டது என்பதை நாடாளுமன்றத்திலே பதிவு செய்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தையும் வெளியேற்றி விட்டு சாட்சியங்கள் இன்றி நடத்தப்பட்ட போர். ஆகவே அங்கு நடந்த அத்தனை கொலைகளுக்கும் இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், சர்வதேசம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
அத்துடன் “2009ஆம் ஆண்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்த அமெரிக்க தூவர்களும், இந்திய தூதுவர்களும் தன்னை சந்தித்தாகவும் போரை தாம் முடிவிற்கு கொண்டு வரப்போவதாகவும், போரின் பின்னர் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் நிரந்தர அரசியல் தீர்வு வரும் என்றும் சொல்லியிருந்தார்கள். அந்த வாக்குறுதியை நான் நம்பியிருந்தேன்” என்று சம்பந்தன் சொல்லுகின்றார்.
“எனினும் இப்போது பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அமெரிக்காவும் இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது” என வெளிப்படையாக அம்பலப்படுத்தினார் என நிக்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சம்பந்தன் ஓய்வுபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியும் வெற்றிடமாகும். அதனை இலக்கு வைத்துக் கொண்டு தான் இந்த ஓய்வு பெற வேண்டிய கதை பேசப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |