அறவழிப் போராட்டங்களில் பங்கேற்று சிறையும் சென்றவரே இரா.சம்பந்தன்! சண்முகம் குகதாசன் பெருமிதம்
சத்தியாக்கிரகப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அறவழிப் போராட்டங்களில் பங்குகொண்டு சிறையும் சென்றவரே இரா.சம்பந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற இரங்கல் உரையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியில் இணைவு
மேலும் தெரிவிக்கையில், இராஜவரோதயம் சம்பந்தன் 1956ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இலங்கைத் தமிழர் உரிமை மீட்பு தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1961ஆம் ஆண்டில் மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அறவழிப் போராட்டங்களில் பங்குகொண்டு சிறையும் சென்றார்.
1977ஆம் ஆண்டில் தந்தை செல்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பின்பு அவர் ஆற்றி வந்த சட்டத்தொழிலை துறந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.
700 வழக்குகள்
அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்வந்த வேளையில் ஏறத்தாழ 700 வழக்குகளை கையாண்டு கொண்டிருந்தார். 1977ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.
அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியதோடு ஆக மொத்தம் 32 ஆண்டுகள் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர் இரா.சம்பந்தன்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக திருகோணமலை என்றால் இரா.சம்பந்தன், இரா.சம்பந்தன் என்றால் திருகோணமலை என்ற அளவுக்கு அனைவரும் எண்ணும் வகையில் செயற்பட்டார்.
இதுவரையில் இலங்கையின் குடியரசுத் தலைவர்களாக விளங்கிய மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர்களான ஜீனியஸ் ரிச்சட் ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜயதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகிய குடியரசுத் தலைவர்களுடன் இலங்கைத் தமிழர் இனச்சிக்கலை தீர்ப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
அதேபோல இலங்கை இனச்சிக்கலை தீர்ப்பது தொடர்பாக இந்தியக் குடியரசின் பிரதமர்களான இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, விஸ்வநாத் பிரதாப் சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், எச். டி. தேவகவுடா, இந்தர் குமார் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோதி ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
இலங்கை - இந்திய உடன்படிக்கை
1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை, வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணசபை உருவாக்கம் முதலியவற்றில் அன்றைய தமிழ்த் தலைவர்களான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், முருகேசு சிவசிதம்பரம் ஆகியோருடன் இணைந்து முதன்மையான பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான மாண்புமிகு ரணசிங்க பிரேமதாசவின் பதவிக் காலத்தில் 1991 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான தெரிவுக்குழு, குடியரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்த போது 2000 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள் மற்றும் குடியரசுத் தலைவர் மாண்புமிகு மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் ஆகியவற்றில் பங்கு கொண்டு காத்திரமான பங்களிப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை நிலவிய நல்லாட்சி அரசு காலத்தில் இனச்சிக்கலுக்கு ஒரு தீர்வு காணலாம் என்று அவர் மிகையான நம்பிக்கை கொண்டிருந்தார். எனினும் அது நிறைவேறாமை ஒரு துன்பம் தோய்ந்த வரலாறு ஆகும்.
இலங்கைத் தமிழர் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அரை நூற்றாண்டு காலமாக அயராது பாடுபட்ட மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 2024 ஆம் ஆண்டு ஆனி மாதம் 30 ஆம் நாள் இயற்கை எய்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




