சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் நேற்று(12.05.2026) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அசம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடிஸ்வரன், எம்.எஸ் வாஸீத் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம் அஸ்லம், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
இதன்போது, பிரஜாசக்தி கிராம மட்ட செயற்திட்டங்களுக்கான அங்கீகாரம், அங்காடி வியாபாரிகளுக்கான வியாபார அனுமதி, பேருந்து டிப்போ அபிவிருத்தி மற்றும் விளினையடி வீதிச் சமிஞ்சை நிறுவுதல் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வளத்தாப்பிட்டி குளத்தின் மேற்குப் பக்கமாக யானை வேலி அமைத்தல், சம்மாந்துறை MPCS-க்கு சொந்தமான SP/16 கிளைக் காணியினை மின்சார சபைக்கு வழங்கும் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, செந்நெல் கிராமம் மற்றும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பாடத்தினை ஆரம்பிப்பது, வீரமுனை இந்து மயானப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பௌதீகத் தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனப் பிரச்சினைகள், புனரமைக்கப்படாமல் உள்ள வீதிகள் மற்றும் விவசாயக் காணி தொடர்பான முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை எட்டுவது எனப் பல முக்கிய தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டுள்ளன.
